September 11, 2024

சீனாவின் ஆக்கிரமிப்புகளை தடுக்க அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் மற்ற நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் – சீன மனித உரிமை ஆர்வலர்

சீனாவின் ஆக்கிரமிப்புகளை தடுக்க அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் மற்ற நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் - சீன மனித உரிமை ஆர்வலர்

சீனாவின் ஆக்கிரமிப்புகளை தடுக்க அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் மற்ற நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்று சீனாவைச் சேர்ந்த கண் பார்வையற்ற மனித உரிமை ஆர்வலர் வலியுறுத்தியுள்ளார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த கண் பார்வையற்ற அந்த நபரின் பெயர் சென் குவாங்செங். கடந்த 2012-ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஆதரவால் அமெரிக்காவில் தஞ்சமடைந்தார். இந்நிலையில் குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் பேசிய அவர், சீன கம்யூனிஸ்ட் கட்சியானது மனித குலத்துக்கு எதிரானது என்றும், அது தனது சொந்த மக்களையே சித்ரவதை செய்து வருவதாகவும் குற்றஞ்சாட்டினார். மேலும் உலகின் நல்வாழ்விற்கு சீனா பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ’மோசமான ஆட்சி நடத்தும் அரசுக்கு எதிராக நிற்பது எளிதானது அல்ல என்பது எனக்குத் தெரியும். சீனாவின் ‘ஒரு குழந்தை’ கொள்கை மற்றும் பிற அநீதிகளுக்கு எதிராக பேசியபோது, நான் துன்புறுத்தப்பட்டேன். சீன கம்யூனிஸ்ட் கட்சியால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டேன். சீனாவின் ஆக்கிரமிப்பைத் தடுக்க மற்ற ஜனநாயக நாடுகளையும் ஒன்று சேர்க்க அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சீனாவுக்கு எதிராக அதிபர் டிரம்ப் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இந்தப் போராட்டத்தில் அவருக்கு உதவ மற்ற நாடுகளும் முன்வர வேண்டும். சீன ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு, ட்ரம்பிற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும், வாக்களிக்க வேண்டும் என்று சென் குவாங்செங் கேட்டுக் கொண்டார்.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் பெரும் உயிரிழப்பும் அச்சமும் ஏற்பட்டுள்ளது. அதேபோல் சீன கம்யூனிஸ்ட் என்ற வைரஸ், உலக மக்களை அச்சுறுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.