März 28, 2025

இலங்கை:மீண்டும் முடக்கமா?

எல்லைகள் மூடல் மற்றும் முடக்கம் போன்ற கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்கப்படலாம் என ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஒமிக்ரோனால் ஏற்பட்டுள்ள புதிய ஆபத்து குறித்து சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி, வறியநாடுகளின் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளிற்கு செல்வந்த நாடுகள் வலுவான விதத்தில் உதவவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியா, சீனா, அமெரிக்கா, ஜப்பான் ஆகியநாடுகளின் தாராள மனப்பான்மையை பாராட்டுவதாகவும் இந்த நாடுகள் நேரடியாகவோ அல்லது கொவக்ஸ் திட்டத்தின் மூலமாகவோ கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வழங்கியுள்ளன என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அதேவேளை உலகின் ஏனைய பகுதியில் மிகவும் குறைந்தளவு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதால் பேராபத்தை ஏற்படுத்தக்கூடிய புதிய வைரஸ் உருவாகியுள்ளது என்றும் இதனை உன்னிப்பாக அவதானிக்கவேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள தடுப்பூசிகள் இந்த வைரசினை எதிர்கொள்வதற்கு போதுமானவையல்ல என்பதால், உலகம் மீண்டும் முன்னைய ஆபத்தான நிலைக்கு திரும்பலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, எல்லைகள் மூடப்படுவது, முடக்கல்கள் போன்ற கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்கப்படலாம் எனவும் இதனால் மிக மோசமான விளைவுகள் ஏற்படலாம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.