April 30, 2024

மன்னாரில் பைசர் தடுப்பூசி பெற்றுக் கொள்ள நீண்ட வரிசையில் நின்ற பலர் ஏமாற்றத்துடன் திரும்பினர்

மன்னார் நகர் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள இரண்டு பாடசாலைகளில் நேற்று ஞாயிறு (11) மற்றும் இன்று திங்கள் (12) ஆகிய இரு தினங்கள் மேற்கொள்ளப்பட்ட ‘பைசர்’ கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளின் போது பல மணி நேரம் காத்திருந்த நூற்றுக்கணக்கான மக்களுக்கு குறித்த தடுப்பூசி வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் உள்ள கரையோர பிரதேசங்களில் உள்ள அபாயம் கூடிய கிராமங்கள் அடையாளம் காணப்பட்டு முன்னுரிமை வழங்கப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை தலைமன்னாரில் முதல் கட்டமாக ‘பைசர்’ கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள கரையோர பகுதிகளில் வசிக்கும் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பைசர் கொரோனா தடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மன்னார் நகர் பகுதியில் வசிக்கும் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நேற்று ஞாயிறு (11) மற்றும் இன்று திங்கள் (12) ஆகிய இரு தினங்கள் தடுப்பூசி செலுத்தும் பணி இடம் பெற்றது.

மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையில் தாழ்வுபாடு, பட்டித்தோட்டம், எழுத்தூர், எமில் நகர், சாவற்கட்டு,பனங்கட்டுக்கொட்டு மேற்கு, பனங்கட்டுக் கொட்டு கிழக்கு, சின்னக்கடை, ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கும், மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலையில் பெரியகடை, மூர்வீதி, உப்புக்குளம் வடக்கு, உப்புக்குளம் தெற்கு, பள்ளிமுனை கிழக்கு, பள்ளிமுனை மேற்கு, சௌத்பார் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கும் கடந்த 2 தினங்கள் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மக்களுக்கு மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் மன்னார் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அறிவித்தல்களை வழங்கி இருந்தனர்.

குறித்த அறிவித்தல்களுக்கு அமைவாக குறித்த கிராமங்களை சேர்ந்த மக்கள் தமக்கு உரிய நிலையங்களுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) காலை முதல் சென்று நீண்ட வரிசையில் நின்று தமக்கான தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டனர்.

நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சென்று தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதவர்களும், செல்லாதவர்களும் தமக்கு உரிய நிலையங்களுக்கு இன்று திங்கட்கிழமை (12) காலையிலேயே சென்றுள்ளனர்.

எனினும் நீண்ட வரிசையில் மக்கள் தமக்கு உரிய நிலையங்களுக்கு முன் நின்றுள்ளனர்.எனினும் குறிப்பிட்ட நேரத்துடன் மக்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

தடுப்பூசி முடிவடைந்து விட்டதாகவும் இதனால் தாங்கள் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

பல கிராமங்களை ஒன்றிணைத்து தடுப்பூசியை வழங்க மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாகவே மக்கள் ஏமாற்றத்துடன் திருப்பி அனுப்பப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடையம் தொடர்பாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி. வினோதன் அவர்களிடம் வினவிய போது,,,,

மன்னார் மாவட்டத்திற்கு என வழங்கப்பட்ட 20 ஆயிரம் பைசர் கொரோனா தடுப்பூசிகளில் உயிலங்குளம் மற்றும் முருங்கன் பகுதிகளில் உள்ள வயோதிபர்களுக்கு வழங்கவே சுமார் 300 தடுப்பூசிகள் மிகுதி உள்ளது.ஏனையவை முடிவடைந்து விட்டது.

மேலும் 20 ஆயிரம் ‘கொரோனா’ தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள துரித நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

குறித்த தடுப்பூசிகள் கிடைத்தவுடன் விடுபட்ட 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் வழங்கப்படும்.என அவர் மேலும் தெரிவித்தார்.