März 28, 2025

தமிழின அழிப்பு விமானங்களைப்புதுப்பிக்கும் சிங்கள அரசு

பேரினவாத  சிங்கள விமானப்படைக்கு சொந்தமான தமிழின  அழிப்பு விமானமான கிபிர் ரக (Kfir) தாக்குதல் விமானங்களைப்புதுப்பிப்பதற்காக இஸ்ரேல் விமான நிறுவனமொன்றுடன் சிங்கள பேரினவாத பாதுகாப்பு அமைச்சு 50 மில்லியன் டொலர் இணக்கப்பாட்டில் கைச்சாத்திட்டுள்ளது.

மக்கள் கடுமையான பசி பட்டினியை எதிர்நோக்கியுள்ள போது, மக்களின் நலன்களை கருத்தில் கொள்ளாது, தமிழ் இன அழிப்பு விமானங்களைப்புதுப்பிப்பதற்கான தேவைகள் தற்போது ஏன் சிறீலங்கா அரசுக்கு எழுந்துள்ளது.

உலக நாடுகளின் ஒத்துழைப்புடன் விடுதலைப் போராட்டத்தை நசுக்கி தமிழர்களை கொன்றுகுவித்துவிட்டு விடுதலைப் புலிகளை அழித்துவிட்டோம் என மார்புதட்டும் சிங்கள இனவெறி அரசு இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவது ஏன்?

உலகில் ஏற்பட்டுள்ள தொற்று நோய் சிறீலங்காவில் நாளாந்தம் அதிகரித்துக் கொண்டிரு;க்கிறது. அதற்கான தடுப்பு ஊசியைக் கொள்வனவு செய்வதற்கு உலக நாடுகளிடம் கையேந்தும் சிறீலங்கா அரசு, இன அழிப்பு விமானத்தைப்புதுப்பிப்பதற்கு 50 மில்லியன் ஒதுக்கியுள்ளது.

அரசுக்கு எதிராக விவசாயிகள் நாளாந்தும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர், அரச அதிகாரிகள் தொழிச்சங்க நடவடிக்கை, நாட்டின் கடன் சுமை சொல்லோண்ணாளவுக்கு ஏறியுள்ளது. இந்நிலையில் விமானத்தைப்புதுப்பிப்பது என்பது கண்மூடித்தனமான செயற்பாடாகவே உள்ளது.

இந்த இணக்கப்பாட்டிற்கு அமைய, விமானங்களின் கட்டமைப்பு புதுப்பிக்கப்படவுள்ளதுடன், அவற்றுக்கு புதிய ரேடார், தொலைத்தொடர்பு வசதிகள் மற்றும் மறைப்புகள் வழங்கப்படவுள்ளன.

இதனைத் தவிர, இலங்கை விமானப் படை உறுப்பினர்களுக்கு இந்த புதுப்பித்தல் தொடர்பிலான நிபுணத்துவ பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன.