Mai 18, 2024

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்:பிணையில்லை

நீதிமன்ற தடையுத்தரவை மீறி மட்டக்களப்பு கல்குடா கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுத்த குற்ற சாட்டில் கைது செய்யப்பட்ட 10 பேரினது விளக்கமறியல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை மட்டக்களப்பை சேர்ந்த லவக்குமார் என்பவரின் தலைமையில் 10 பேர் நினைவேந்தல் நிகழ்வினை முன்னெடுத்தனர்.

நினைவேந்தல் நிகழ்வினை முன்னெடுக்க லவக்குமாருக்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்நிலையில் நீதிமன்ற தடையுத்தரவை மீறி கல்குடா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அஞ்சலி நிகழ்வினை  நடாத்தி இருந்தனர்.

அவர்கள் அஞ்சலி செலுத்திய புகைப்படங்கள் , சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தன. பகிரப்பட்ட படங்களை ஆதாரமாக கொண்டு பொலிஸாரினால் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

அன்றைய தினம் (மே 18) கைது செய்யப்பட்டவர்களை பொலிஸார் நீதிமன்ற அனுமதியுடன் மூன்று நாட்கள் தடுத்து வைத்து தொடர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

அதன் பின்னர் அவர்களை நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து நீதிமன்று அவர்களை விளக்கமறியலில் தடுத்து வைக்க உத்தரவிட்டது.

அந்நிலையில் குறித்த வழக்கு நேற்றைய தினம் வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் அழைக்கப்பட்ட போது , பதில் நீதவான் அவர்களை எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.