März 28, 2025

இதயம் பிளந்த தருணம்.-வன்னியூர் குருஸ்-

இதயம் பிளந்த தருணம்.
*** *** ***
உயரக் கட்டிய ஏணியில்
ஒரு படிகூட இல்லாமல்
குண்டும் குழியுமாயான
மனத்தோடும்… நிலத்தோடும்…
துயரப்பட்ட இனமாய்
தோய்ந்து தேய்ந்து போகிறோம்…!

மனதின் சொல் மறந்து
தானே நடக்கும் கால்களோ
குண்டைக் கக்கி எமையழித்த
பெருங் குழல்களுக்குள்ளே
வரும் நிலையறிந்தும்
வழியின்றிப் போகிறது….!

தொல்லை தந்த அந்தத்
துப்பாக்கி முனையினில்
இல்லை தயவுகள் என்று
நன்கே தெரிந்தும்….
கல்லைக் கட்டிக்கொண்டு
கிணற்றுள் பாய்வதாய்
மயங்கிய நிலையில் நாம்
மனமிழந்து போகிறோம்….!

உறவைத் தொலைத்த மனங்கள்….!
உறக்கம் கலைந்த
கண்கள்…!
அழுது வரண்ட
தொண்டை…!
அழுகி மணத்த
புண்கள்…!
ஓடிக் களைத்த
கால்கள்….!
உருண்டு விறைத்த தோல்கள்…!
மானம் மறைத்த துணியென….!!
எஞ்சிய இவற்றோடு
கொஞ்சம் கொஞ்சமாய்
கைகளை மேலுயர்த்தி
இன்று இவர்களிடம் நாம்.

-வன்னியூர் குருஸ்-