März 28, 2025

உண்மை நிலைமையை அரசாங்கம் மறைக்கின்றது

அரசாங்கம் கொரோனா வைரஸ் தொடர்பான உண்மைநிலையை மக்களிடமிருந்து மறைக்கின்றது என தேசிய மக்கள்சக்தி குற்றம்சாட்டியுள்ளது.

நாட்டில் நிலைமை வழமைக்கு திரும்பியுள்ளது என காண்பித்து அதன் மூலம் அரசியல் ஆதாயம் பெறுவதற்காக அரசாங்கம் உண்மையை மறைக்கின்றது என ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

நிலைமையின் பாரதூரமான தன்மையை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் காரணமாக பாரதூரமான விளைவுகள் ஏற்பட்டுள்ளன மக்கள் சுகாதார விதிமுறைகளை மறந்துவிட்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.

சுகாதார அதிகாரிகள் பாதுகாப்பு படையினர் மற்றும் அரசாங்கம் இணைந்து கொரோனா வைரசினை கட்டுப்படுத்திய போதிலும் சமூகத்தில் அளவுக்கதிகமான நடவடிக்கைகளை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் எடுத்த பல நடவடிக்கைகளால் நிலைமை மேலும் மோசமானதாக மாறியுள்ளதுஎன ஜேவிபியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட நோயாளிகளை விட குணமடைந்த நோயாளிகளையே அரசாங்கம் காண்பிக்க முயல்கின்றது என குற்றம்சாட்டியுள்ள அவர் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைகழகத்தின் கொவிட் 19 சோதனை அறிக்கைகளில் அரசாங்கம் மாற்றங்களை மேற்கொண்டுள்ளதால் பல்கலைகழகம் பி.சி.ஆர் சோதனைகளில் இருந்து விலகியுள்ளது என ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது என அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸ் குறித்த உண்மை நிலையை மறைப்பதற்காக இவை அனைத்தையும் அரசாங்கம் செய்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.