Oktober 23, 2024

கருணாவின் பகிரங்க அறிவிப்பு! கோட்டாபயவுக்கு ஏற்பட்ட நெருக்கடி..!!

மனித குலக்திற்கெதிரான பாரதூரக் கொலைகளைச் செய்த முன்னாள் பிரதியமைச்சரும், பொதுஜன முன்னணியின் வேட்பாளருமான விநாயகமூர்த்தி முரளிதரனை கைது செய்யும்படி, சிங்கள ராவய அமைப்பு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

வன்னியில் இடம்பெற்ற போரின் போது 2000 தொடக்கம் 3000 வரையிலான ஸ்ரீலங்கா படையினரை ஆனையிறவு பகுதியில் வைத்து ஒரே இரவில் படுகொலை செய்ததாக கருணா அம்மான் நேற்றைய தினம் பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.

இக்கருத்து தற்போது தென்னிலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில்,

கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதத்த தேரர் கருணா அம்மானைக் கைது செய்யும்படி கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளராக களமிறங்கியுள்ள விநாயகமூர்த்தி என்று சொல்லப்படும் கருணா உடலை உலுக்கும் வகையிலான மிகவும் பாரதூரமான கருத்தொன்றை வெளியிட்டுள்ளார்.

ஆனையிறவு பகுதியில் ஸ்ரீலங்கா படையைச் சேர்ந்த இராணுவத்தினர் 2000 அல்லது 3000 பேரை தான் கொலை செய்ததாக கூறியுள்ளார். இது ஸ்ரீலங்கா சட்டத்தின்படி முரணான அறிவிப்பாகும்.

கொலைக் குற்றச்சாட்டில் அவரைக் கைது செய்ய முடியும். அவரைக் குற்றவாளியாக்க முடியும். சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்க முடியும்.

ஆகவே உடனடியாக அவருக்கெதிராக நடவடிக்கை எடுக்கும் படியும் பதில் பொலிஸ்மா அதிபர், குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியோருக்கு நினைவுபடுத்துகின்றோம்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களை இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்கள் நடத்தியிருந்தன. அதனை விடவும் மனித குலக்திற்கெதிரான பாரதூரக் கொலைகளை கருணா செய்திருப்பது அவராலே சொல்லப்பட்டுள்ளது.

ஆனையிறவு பகுதியில் மட்டுமல்ல, கிழக்கு மாகாணத்தில் அரந்தலாவ பகுதியில் பிக்குமார்களை படுகொலை செய்தமை, சில கிராமங்களுக்குள் நுழைந்து அப்பாவி மக்களை வெட்டிக் கொலை செய்தமை போன்ற செயற்பாடுகளை கருணா செய்திருக்கின்றார்.

இப்போது பகிரங்கமாகவே அவரால் செய்யப்பட்ட பாவ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சஹ்ரான் செய்த குற்றச் செயல்களைப் போல கருணாவும் இனப்படுகொலையை செய்துள்ளார்.

உடனடியாக அவரைக் கைது செய்ய வேண்டும். தேர்தல் பிரசாரத்தில் வைத்து அவர் செய்துள்ள அறிவிப்பின் ஊடாக நாட்டிற்கு மிகவும் ஒரு பயங்கரமான அறிவிப்பை விடுத்து மீண்டும் ஒருமுறை கருணா ஈழத்தை கேட்கின்றாரா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

ஆகவே ஜனாதிபதி மற்றும் அதிகாரிகளிடம் கருணா அம்மான் மீதான நடவடிக்கையை எடுக்க வேண்டும்படி கோருகிறோம். பல்லாயிரக்கணக்கான கொலையை செய்தவரை நாடாளுமன்றத்திற்குள் அனுமதிக்க முடியுமா? நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு சவால் விடுத்தவரை விட்டுவைக்க முடியுமா?

அதேபோல முன்பு செய்த விளையாட்டுக்களை இப்போது செய்ய முடியாது என்பதை கருணா அம்மானுக்கு நினைவூட்டுகின்றோம்.

தற்போதைய ஜனாதிபதி நாட்டின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பவர். இன்றும் ஈழத்தை கருணா அம்மான் கோரினால் விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்ட அதே நிலையே அவருக்கும் ஏற்படும் என்பதை எச்சரிக்கின்றோமென அவர் தெரிவித்துள்ளார்.