Mai 6, 2024

இரண்டு நாட்களுக்குள் பிரதமர் மகிந்த இராசபக்சா அவர்கள் உங்கள் கோரிக்கைகள் சார்ந்த உத்தரவுகளை வெளியிட வேண்டும்.

நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதமரைச் சந்தித்ததை வரவேற்கின்றோம்.
ஆனால்…
இனிமேல் தமிழர் தரப்புக்கான தீர்வு என்பதை தயவு செய்து மறந்து விடுங்கள்.
தயவு செய்து அப்பாவித் தமிழ் மக்களை இனிமேலும் ஏமாற்ற முயல வேண்டாம்.
கோட்டாபாயா இராஜபக்சா சிங்கள மக்களின் வாக்குகளினால் மட்டுமே தெரிவு செய்யப்படுவேன் என்று மார்தட்டிக் கூறி சிங்கள மக்களால் மட்டுமே தெரிவு செய்யப்பட்டு வெற்றி கொண்டதன் மூலம், எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு என்றொரு அபிலாசை இருக்கின்றது, அதற்க்கு ஒரு அரசியல் தீர்வு தேவை என்பதை, தென் இலங்கை மனிதாபிமான ரீதியில் கூட தோற்கடித்து விட்டது என்பதை யாரும் மறந்துவிடலாகாது.
இன்று பிரதமர் மகிந்த இராஜபக்சா அவர்கள் கடந்தகால பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரோடு அதற்க்கு முந்திய பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்று சேர்த்து அழைத்திருந்தது கெரோனா பிரச்சினையோடு பாராளுமன்றத்தை கூட்டுவது சம்பந்தமாகவும் கலந்துரையாடி ஆலோசனை பெறுவதற்கேயாகும்.
பல முக்கிய கட்சிகள் இச்சந்திப்பை தவிர்த்திருந்தபோதும், இந்த சந்தர்ப்பம் அரசியல் பிரச்சினைக்கு உரியதல்ல இங்கே தமிழர் தரப்பு நியாயாதிக்கங்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த சந்தர்ப்பத்தில் கூறுவதற்கு நியாயாதிக்கம் என்ற சொற்பதத்தை பயன்படுத்தியதே, தமிழ் மக்களை ஏமாற்றுகின்றதொரு வித்தையாகும். நியாயாதிக்கம் என்பது Jurisdiction ஆகும். பாராளுமன்றக் கலைப்புக்கும் தேர்தல் திகதியை அறிவிப்பதற்க்கும் நியாயாதிக்கம் எனும் பதம் பொறுத்தமானது.
ஆனால் கெரோனாவினால் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களுக்கும் அவர்களினது அன்றாடப் பட்டினிக்கும் ஆளுனர் சார்ள்ஸினால் நிராகரிக்கபட்டிருக்கும், வழங்கப்படாதிருக்கும் மனிதாபிமான உதவிகளுக்கும் எந்தவொரு சம்பந்தமும் கிடையாது. ஆனால் இன்றைய நிலையில் இவைதான் முக்கியமானது.
சம்பந்தர் அவர்கள் சட்டத்தை ஆங்கிலத்தில் கற்றிருக்கலாம் ஆனால் நியாயாதிக்கம் ( Jurisdiction)என்பது சட்டத்தில் எதைக் குறிப்பிடும் என்பதை சுமந்திரனும் தெளிவாக புரிந்திருக்காமல் இருக்கமுடியாது. இறுதியாக ஊடகவியளாலரின் தவறு எனக் கூறவும் கூடும்.
இன்றுள்ள பிரச்சினைகளுக்கான தீர்வுகள் என்பதும் நியாயாதிக்கம் ( Jurisdiction) என்பதும் முழங்காலுக்கும் மொட்டந் தலைக்கும் முடிச்சுப் போட்ட கதையாகும்.
நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதமரைச் சந்தித்ததை வரவேற்கின்றோம்.
ஆனால்…
அங்கே பேசப்படவேண்டும் என இவர்களால் எழுதிக் கொடுக்கப்பட்ட விடயம், இந்தச் சந்திப்பு அறிக்கையையே கோமாளித்தனமாக்கிவிட்டது.
சம காலத்தில் ஜீவாதரமின்றி தவித்துக் கொண்டிருக்கும் வடகிழக்கு மலையக, கொழும்பு வாழ் தமிழர்களின் துன்ப துயரங்களுக்கு சரியானதொரு தீர்வை, அதற்கான வாரந்தக் கொடுப்பனவுகள், வாழ்வாதரக் கொடுப்பனவுகள், உலர் உணவுக் கொடுப்பனவுகள் , இவற்றையெல்லாம் புரியாத ஆளுனர், என்பனவைப் பற்றியெல்லாம் விலாவாரியாகப் பேசியிருக்க வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இன்றைய அலரி மாளிகை சந்திப்பும் அதன் பின்னரான மாலைநேர விஜேராம மாவத்தை சந்திப்பும் வெற்றி பெற்றுவிட்டது என நாங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டுமாயிருந்தால்…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்கு பற்றுதலை பிரதமர் கெளரவித்திருப்பாராகவிருந்திருந்தால் இரண்டு நாட்களுக்குள் பிரதமர் மகிந்த இராசபக்சா உங்கள் கோரிக்கைகள் சார்ந்த உத்தரவுகளை வெளியிட வேண்டும்.