September 19, 2024

தண்டனை நிச்சயம்:றிசாட்!

சமூக வாக்குகளால் பதவிக்கு  வந்து, கொடுங்கோல் ஆட்சியாளருக்கு விலைபோன முஸ்லிம் எம்.பிக்களை ஒருபோதும் மன்னிக்க முடியாதென அகில

 இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

„சந்தர்ப்பவாத அரசியலுக்கு விலைபோனவர்களை கட்சி ஒருபோதும் மன்னிக்கப்போவதில்லை. எங்களைவிட்டுப் பிரிந்த மூவரையும் துணிச்சலுடன் கட்சியிலிருந்து நீக்கியுள்ளோம். இதேபோன்று, துணிச்சலான முடிவுகளையே  முஸ்லிம் காங்கிரஸ் எடுக்க வேண்டும். அப்போதுதான், சமூகத் துரோகிகளுக்கு சிறந்த பாடம்புகட்ட மக்கள் முன்வருவர். துரோகிகளை மன்னிப்பது பின்னர், மீண்டும் கட்சியில் இணைப்பது என்பதெல்லாம் கோமாளித்தன அரசியலாகும். மக்கள் மீது நம்பிக்கையுள்ள தலைமைகள், துரோகிகளை தண்டிப்பதற்கு தயங்கப்போவதில்லை.

மக்களின் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் வந்த எமது எம்.பிக்கள், கொடுங்கோல் ஆட்சிபுரிந்த கோட்டாபயவை பலப்படுத்தவே இருபதாவது திருத்தத்துக்கு வாக்களித்தனர். பாராளுமன்றத்தில் 144 எம்.பிக்களை வைத்திருந்த இவருக்கு, சில சட்டங்களைத் திருத்துவதற்கு முடியாமலிருந்தது. இதனால், கொடுங்கோல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெறுவதற்காக, எமது எம்.பிக்களை விலை பேசினார். சமூகத்தின் அமானத்தை அடகுவைத்து கோட்டாவிடம் இவர்கள் விலைபோகினர். இவர்களின் ஆதரவால் பலமடைந்ததாலேயே, எமது ஜனாஸாக்களை எரிப்பதற்கு கோட்டாபய துணிந்தார். விலைபோன எம்.பிக்களின் உறவினர்கள் எரிக்கப்பட்டிருந்தால், சமூக வலிகளை உணர்ந்திருப்பர். இதனால்தான், சமூக நெறிக்கு உட்பட்டும், நீதிக்குக் கட்டுப்பட்டும் இந்த எம்.பிக்களை தூக்கி எறிந்துள்ளோம்.

சமுதாயத்தை வழிநடத்துவதில் தர்ம வழியில் செல்லும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வளர்ச்சிக்கு இறைவனின் உதவி நிச்சயம் கிடைக்கும். மறைந்த தலைவர் அஷ்ரபின் சிந்தனையிலேயே எமது கட்சியும் இளைஞர்களை வழி நடத்துகிறது. உணர்ச்சிகளுக்கு தமிழ் இளைஞர்கள் அடிமையானதால், நாட்டில் பாரிய யுத்தமே மூண்டது.  இதுபோன்றதொரு நிலைக்கு முஸ்லிம் இளைஞர்கள் சென்றுவிடக்கூடாது. ஒரு சிலரின் தவறுகளைத் தண்டிப்பதற்காக, சமூகத்தையே நெருக்கடிக்குள்ளாக்கும் தீர்மானத்தை எடுத்துவிடாதீர்கள்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert