ஐ .நா நோக்கிய மிதியுந்துப் போராட்டம் பிரித்தானியாவிலிருந்து புறப்பட்டது 15/02/2024.

எதிர்வரும் 04/03/2024 அன்று ஜெனிவாவில் நடை பெற இருக்கும் ஐ.நாவின் கூட்டத்தொடரில் இணையும் அனைத்துலக நாடுகளின் கவனயீர்ப்பையும் அவர்களின் ஆதரவு நிலைப்பாட்டையும் பெறும் நோக்கில் தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழி நின்று தணியாத இலட்சிய தாகத்துடன் தமிழீழத் தாயகத்தின் விடுதலைக்கான மிதியுந்துப் போராட்டப் பயணமானது இன்று பிரித்தானியாவில் ஆரம்பமாகி உள்ளது.
இன்றிலிருந்து தொடர்ந்து 16 நாட்கள் ஐரோப்பியநாடுகளூடாக பயணிக்க விடுதலை உணர்வாளர்கள் உறுதி கொண்டுள்ளனர். எதிர்வரும் மார்ச் மாதம் நான்காம் திகதி ஐ நா திடல் முன்பாக அனைத்துலக ரீதியாக மாபெரும் மக்கள் போராட்டத்திற்கான முன்நகர்வுகள் நடை பெற்று வரும் சம காலத்தில் தன்னாட்சிக்கான உரிமைக் குரல் முழங்கிய பிரித்தானிய மண்ணில் இருந்து மிதி யுந்துப் பயணம் எழுச்சியோடு இப்போது ஆரம்பமாகியுள்ளது. இப்பயண ஆரம்பதில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டது. இவ் எழுச்சிமிகு போராட்டப்பயணத்தின் அரசியல் விடுதலையின் வேட்கையாக தமிழின அழிப்பிற்கான நீதியும், தமிழீழ மக்களுக்கான தீர்வாக இறைமை கொண்ட தமிழீழ தேசமே இருக்க முடியும் என்பது உறுதிபட எடுத்துரைக்கப்பட்டது.
பணியாளர்களும் உணர்வாளர்களும் இணைந்து கையிலேந்திய தமிழீழத்தின் எழுச்சிக் கொடிகள் காற்றில் கம்பீரமாக அசைந்த வண்ணம்,கொண்ட கொள்கையின் இலட்சிய உறுதியை பிரித்தானிய தேசத்தில் காட்டி நிற்கின்றது. இன்று ஆரம்பமாகிய போராட்டப் பயணமானது பிரபல்யம் மிக்க வழிகள் ஊடாக பயணிக்கும் நேரத்தில் சிங்கள தேசத்தின் தமிழின அழிப்பின் ஆதாரங்களையும் தமிழ் மக்களின் அரசியல் விருப்புக்களையும் பிரசுரங்கள் மூலமும்,பதாதைகள் மூலமும் தெரியப்படுத்தியவாறு பி.ப 4:00 மணிக்கு பிரித்தானிய பிரதமரின் வதிவிடத்தை அடையவுள்ளது. உறுதியேற்போடு தொடரும் தொடர் மிதியுந்து போராட்டப் பயணமானது நெதர்லாந்து உள்ளிட்ட முக்கிய ஐரோப்பிய நாடுகள் ஊடாகச் சென்று ஜெனிவாப் பேரணியில் இணைய இருக்கின்றது. அனைத்துலக ரீதியில்தமிழ்த் தேசிய இனமாக அணிதிரண்டு எமது தேச விடுதலைக்கான குரலை ஜெனிவாவில் ஓங்கி ஒலிப்போம்.