September 20, 2024

யேர்மனியில் தன்னிகரில்லாத் தனிச்சிறப்புடன் விளங்கும் தமிழ்த்திறன்

தமிழ்க் கல்விக் கழகத்தின் வரலாற்றுப் பாதையில் கடந்த 29ஆண்டுகள் தன்னிகரில்லாச் சிறப்புடன் வெற்றி நடைபோட்டு வருகிறது தமிழ்த்திறன் போட்டி. இப்போட்டி தமிழாலயங்களில் தமிழ்மொழியைக் கற்றுவரும் மாணவர்களின் மொழிவளத்தைச் சீர்படுத்தி, மேம்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் நடாத்தப்பட்டு வருகிறது.

தமிழ்க் கல்விக் கழகத்தின் தமிழ்த்திறன் பிரிவின் திட்டமிடலுக்கமைய ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நறுந்தொகை, திருக்குறள் போன்ற மனிதக் குமுகாயத்தைப் பண்படுத்தத் துணைநிற்கும் அறநூல்களிலிருந்து மனனப் போட்டிகளும் வாசிப்பு, உரையாற்றல், கவிதையுடன் உறுப்பமைய எழுதுதல், சொல்வதெழுதுதல், கட்டுரை ஆகிய எழுதுதல் போட்டிகளுடன் ஓவியமும் இணைந்த போட்டிகள் நடாத்தப்படுகின்றன. தமிழாலயம், மாநிலம் என இரு மட்டங்களில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மாணவர்களின் இறுதி வெற்றியைத் தீர்மானிக்கும் நாடுதழுவிய மட்டத்திலான இறுதிப் போட்டி கிறேபெல்ட் நகரில் 25.02.2023 சனிக்கிழமை சிறப்புடன் நிறைவெய்தியுள்ளது.

64 தமிழாலயங்களிலிருந்து 363 போட்டியாளர்கள் 41 போட்டிகளில் பங்கேற்றனர். நடைபெற்ற இப்போட்டிகளைத் தமிழ்த்திறன் பிரிவால் தெரிந்தெடுக்கப்பட்ட 45க்கு மேற்பட்ட பட்டறிவுமிக்க ஆசிரியப்பெருந்தகைகளும் இளைய ஆசிரியர்களும் இணைந்து, ஒருவழி நின்று தாம் ஏற்றுக் கொண்ட பணியைச் செம்மையாக நிறைவேற்றியுள்ளனர். இவர்களின் முடிவே இறுதியாகக் கொள்ளப்பட்டு, தமிழ்த்திறன் போட்டி 2022இன் வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்பட்டார்கள்.காலை 08:00 மணிக்குத் தமிழ்த்திறன் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகப் பணியாளர்கள் மண்டபத்தை நோக்கி வருகைதரத் தொடங்கியதையடுத்து, 09:30 மணிக்குத் தொடக்க நிகழ்வுகளுடன் தமிழ்க் கல்விக் கழகத்தின் தமிழ்த்திறன் பிரிவுப் பொறுப்பாளர் திரு.இராஜதுரை மனோகரன் அவர்களின் தொடக்க உரையுடன் யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புப் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறீரவீந்திரநாதன் அவர்களின் வாழ்த்துரையும் தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் திரு.செல்லையா லோகானந்தம் அவர்களின் வாழ்த்துரையும் இடம்பெற்றது. தொடர்ந்து தமிழ்த்திறன் பிரிவினரின் போட்டிவிதிகள் வாசிக்கப்பட்ட பின்னர், போட்டிகளுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட 10 அறைகளில் தமிழ்க் கல்விக் கழகத்தின் 30க்கு மேற்பட்ட இளைய செயற்பாட்டாளர்கள் துணைநிற்க 10:45 மணிக்குப் போட்டிகள் தொடங்கி 17:30 மணிக்கு நிறைவுபெற்றன.

இரு நிலைகளில் வெற்றிபெற்றதன் தொடராக, இறுதிப் போட்டியில் பங்கேற்ற போட்டியாளர்களுக்குப் பங்கேற்புப் பதக்கமும் சான்றிதழும் வழங்கித் தமிழ்க் கல்விக் கழகத்தின் செயற்பாட்டாளர்களால் மதிப்பளிக்கப்பட்டன. இறுதிப் போட்டியில் முதல் மூன்று முதன்மை நிலைகளைப்பெற்று வாகைசூடிய வெற்றியாளர்களுக்கும் புள்ளிகளினடிப்படையில் நாடுதழுவிய மட்டத்தில் வாகைசூடிய முதல் மூன்று தமிழாலயங்களுக்கும் ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கும் எமது 33ஆவது அகவை நிறைவு விழா அரங்குகளில் மதிப்பளிப்புகள் வழங்கப்படவுள்ளன என்பது சிறப்பிற்குரியதாகும்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert