September 16, 2024

விண்வெளி வீரர்கள் இல்லாமல் வந்தடைந்த ஸ்டார்லைனர் விண்கலம்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் இருவரும் கடந்த ஜூன் 5 ஆம் திகதி ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர். அங்கு அவர்கள் ஆய்வுகளை மேற்கொண்டனர். இருவரும் ஆய்வுகளை நிறைவு செய்து 8 நாட்களில் பூமிக்கு திரும்ப திட்டமிட்டிருந்தனர்.

இந்த நிலையில் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது. விண்கலத்தின் த்ரஸ்டர்களில் கோளாறு மற்றும் ஹீலியம் வாயு கசிவு கண்டறியப்பட்டது. இதனால், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. கோளாறு சரிசெய்யபட்டபோதும் இருவரையும் ஸ்டார்லைனர் விண்கலத்தில் பூமிக்கு அழைத்து வரவேண்டாம் என நாசா முடிவெடுத்தது.

இருவரையும் பூமிக்கு கொண்டுவர எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான க்ரு டிராகன் விண்கலம் பயன்படுத்தப்பட உள்ளது. க்ரு டிராகன் விண்கலம் இந்த மாத இறுதியில் சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பப்பட உள்ளது. இந்த விண்கலம் மூலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இருவரும் பூமிக்கு திரும்புவார்கள் என நாசா தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறை சந்தித்த ஸ்டார்லைனர் விண்கலம், விண்வெளி வீரர்கள் இன்றி சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து தற்போது பத்திரமாக பூமியில் தரையிறங்கியுள்ளது. சமார் 6 மணி நேர பயணம் செய்த ஸ்டார்லைனர் விண்கலம் நியூ மெக்சிகோவில் உள்ள ஒயிட் சாண்ட்ஸ் ஸ்பேஸ் ஹார்பரில் இந்திய நேரப்படி இன்று காலை 9.30 மணிக்கு தரையிறங்கியது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert