Mai 4, 2024

சீன எழுச்சி இந்தோ பசுபிப் மூலோபாயம் தமிழரின் அரசியல் எதிர்காலம்! ஓர் உரையாடலுக்கான முன்வரைபு நிமால் விநாயகமூர்த்தி

இன்றைய உலக அரசியல் விவாதங்கள் அனைத்தும் சீனாவைச் சுற்றியதாகவே இருக்கின்றன. ஒரு காலத்தில் சோவியத் யூனியன் எவ்வாறு நோக்கபட்டதோ, அப்படியானதொரு இடத்திலேயே இன்று சீனா தென்படுகின்றது. சோவியத் அமெரிக்க பனிப்போர் மாதிரியான நிலையை இன்றும் உலகம் நெருங்காவிட்டாலும் கூட, அமெரிக்க சீன அதிகாரப் போட்டியில், ஒரு வகையான பனிப்போர் சாயல் தென்படாமல் இல்லை. சில மேற்கத்தைய ஆய்வாளர்கள் இன்றைய நிலைமையைப் பனிப்போர் 2 என்றும் குறிப்பிடுகின்றனர்.

தமிழச் சூழலில் பலரும் கூறுவது போன்று, அடிப்படையில் இது சீனாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்பான விடயமல்ல. சீனா பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைவது மேற்குலகிற்கு ஒரு பிரச்சினையான விடயமல்ல. ஒரு நாடு பொருளாதார ரீதியாக வளர்ச்சியுறுகின்றபோது, அது ஏனைய நாடுகளுக்கும் நன்மையான விடயம் தான். இந்த அடிப்படையில் நோக்கினால், சீனாவின் பொருளாதார வளர்ச்சியைப் பார்த்து மேற்குலம் அசசப்படவில்லை. ஆனால் இங்குள்ள அடிப்படையான பிரச்சினை சீனா எவ்வாறானதொரு அரசியல் முறைமையின் (Political System) கீழ் வளர்ந்து செல்கின்றது என்பதுதான் மேற்குலகின் பிரச்சினை. சீனாவின் உள்ளக அரசியல் முறைமை இன்றைய, மேற்குலக அரசயில் முறைமையிலிருந்து முற்றிலும் மாறுபட்டுக் முறைமையிலிருந்து முற்றிலும் மாறுபட்டுக் காணப்படுகின்றது. உண்மையில் இந்த இடம் தான் மேற்குலகும் சீனாவும் மோதுகின்ற இடமாகும்.

சீனா இன்றைய தாராளவாத உலக ஒழுங்கிற்கு முற்றிலும் மாறான அரசியல் முறைமையை கொண்டிருக்கின்றது. ஒரு தனிக்கட்சி ஆட்சியைக் கொண்டிருக்கின்றது. வாழ்நாள் ஜனாதிபதி முறைமையைக் கொண்டிருக்கின்றது. இது அடிப்படையிலேயே இன்றைய உலக ஒழுங்காகப் போற்றாப்படும், மக்கள் பங்குபற்றல் ஜனநாயக முறைமைக்கு முற்றிலும் எதிரானது. அதாவது மேற்குலகத்தினால் முதன்மைப்படுத்தப்படும் மனித உரிமைகள் மற்றும் தாராளவாத விழுமியங்களுக்கு முற்றிலும் எதிரானது.

ஆனால் ஒரு நாடு தனது அபிவிருத்தியில் முன்னேறுவதற்கும், மனித உரிமை மற்றும் ஜனநாயக விழுவியங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதே சீனாவின் வாதமாக இருக்கின்றது. சீனா இதனை வெறும் ஒரு வாதமாக மட்டும் முன்வைக்கவில்லை மாறாக, நடைமுறையில் நிரூபித்தும் காண்பித்தும் வருகின்றது. மேற்குலக நடைமுறைகளைப் பின்பற்றாமலேயே பொருளாதார ரீதியில் வளர்ச்சி சாத்தியம் என்பதை சீனா நிரூபித்திருக்கின்றது.

இந்த இடத்தில் மேற்குலகம் முதன்மைப்படுத்தும் உலகளாவிய விழுமியங்கள் சீனாவின் அணுகுமுறைகளுக்கு முன்னால் தோல்வி அடைந்திருக்கின்றன. இந்த விடயம் தான் மேற்குலகிற்குச் சவாலாக மாறியிருக்கின்றது. இந்த அடிப்படையில் தான் இன்றை சீன அமெரிக்க முறுகல் நிலையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் இடம்பெற்ற பனிப்போர் எவ்வாறு கம்யூனிசத்திற்கம் முதலாளித்துவத்திற்கும் இடையிலான போராக இருந்ததோ, அவ்வாறானதொரு நிலையில் தான் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான முறுகல்களும் அமைந்திருக்கின்றன. இந்த முறுகல் நிலைமை ஒரு போதுமே முடிவுக்கு வராது. ஏனெனில் மேலே குறிப்பிட்டவாறு, அடிப்படையில் இது இரண்டு அரசியல் முறைமைகளுக்கு (Clash of Political System).

இடையிலான மோதலாகும். இந்த மோதலில் எவராவது ஒருவர் தான் வெற்றிபெற முடியும் நிச்சயம்,  இரண்டு பேருமே வெற்றிபெற முடியாது.

சோவியத் அமெரிக்க பனிப்போரானது, சோவியத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்தே முடிவுக்கு வந்தது. 1990களில், சோவியத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, உலகளாவிய சோவியத் பாணியிலான கம்யூனிச அரசியல் செல்வாக்கும் முடிவுக்கு வந்தது. அமெரிக்கா ஒரேயொரு உலக சக்தியாக எழுச்சியுற்றது. சீனாவின் எழுச்சி, தற்போது அமெரிக்காவின் உலகளாவிய சக்தி என்னும் தகுதிநிலையை அசைப்பதாகவும், அதனுடன் மோதுவதாகவும் அமைந்திருக்கின்றது. இந்த நிலைமையில் ஒரு தீர்மானகரமான முடிவை உலகம் காணும் வரையில், இது ஒரு முடிவற்ற சதுரங்க ஆட்டமாகவே தொடரும்.

இந்த விடயங்களில் தமிழர்களாகிய நாம் எவ்வாறு தொடர்புபடுகின்றோம்? அண்மைக்காலமாக சீன சிறிலங்கா உறவு முக்கிய அரசியல் விவாதப் பொருளாக மாறியிருக்கின்றது. இலங்கைத் தீவில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து செல்வது தொடர்பில், இந்திய மற்றும் மேற்குலக அரசியல் நோக்கர்கள் மத்தியில் சரிசனைகள் அதிகரித்திருக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தின் போது, சீனா பெருமளவு ஆயுத உதவிகளை வழங்கியிருந்தது. 2007இல் அமெரிக்கா சிறிலங்காவிற்கான இராணுவ உதவிகளை இடைநிறுத்தியது. மகிந்த ராஜபக்ச அரசாங்கம் மெருமளவான இராணுவ உதவிகளை அமெரிக்காவிடம் கோரியிருந்த போதிலும் கூட, மனித உரிமை விவகாரங்களை முன்வைத்து, அமெரிக்கா கொழும்பின் கோரிக்கைகளை நிராகரித்தது. தமிழ் நாட்டின் தலையீடுகள் மற்றும் கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் இந்தியாவும், இராணுவ ரீதியான உதவிகளை நிறுத்தியிருந்தது. இந்த இடைவெளியில் தான் சீனாவின் தலையீடு நிகழ்கின்றது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தைக் கொழும்பு தீவிரப்படுத்தியிரந்த 2007 ஏப்பிரலில், 37 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஆயுத தளபாடக் கொள்வனவு உடன்பாடு ஒன்றை சீனாவுடன் கொழும்பு செய்துகொண்டது.

அதிகளவான சீன ஆயுத தளபாடங்கள், அப்போது பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டபாய ராஜபக்சவின் (தற்போது ஜனாதிபதி) நேரடி கட்டிப்பாட்டில் இருந்த, Lanka Logistics & Technologies ஊடகாவே சிறிலங்காவிற்குள் கொண்டுவரப்பட்டது. 2007 ஒக்டோபரில் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சிறிலங்கா விமானப்படையின் பத்து (சிலர் எட்டு என்று குறிப்பிடுகின்றனர்) யுத்த விமானங்கள் அழிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து சிறிலங்கா விமானப்படையின் பலம் பெருமளவு சிதைந்தது. விமானப்படையை மீளவும் பலப்படுத்தும் வகையில், சீனா ஆறு யுத்த விமானங்களை (f7 Fighter Jets) சிறிலங்காவிற்கு வழங்கியது. அதே போன்று விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தின் போது, இராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகா, இந்தியா தாக்குதல் ஆயுதங்களை (offensive Weapons) வழங்க மறுத்த காரணத்தினால்தான், தாம் சீனாவிடம் சென்றதாகக் குறிப்பிட்டிருந்ததையும் இந்த இடத்தில் குறிப்பிடலாம்.

சீனாவின் இராணுவ ரீதியான உதவியே யுத்தத்தை எந்த எல்லை வரையும் கொண்டு செல்லலாம் என்னும் துணிவை ராஜபக்ச அரசிற்கு வழங்கியது. ஒருவேளை. சீனா இராணுவரீதியில் கைகொடுக்காது போயிருந்தால், ராஜபக்சவால் யுத்தத்தை முன்னெடுக்க முடியாமல் போயிருக்கும். யுத்தத்தில் கொழும்பு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சீனாவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான வரலாற்று ரீதியான நட்புசார்ந்த உறவு, மூலோபாய உறவாக பரிணமித்தது. மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக விழுமியங்களு்ககு மதிப்பளிக்காத சீனாவின் வெளிவிவகார அணுகுமுறையின் காரணமாகவே, தமிழர்களுக்கு எதிரான இறுதி யுத்தத்தின் போது சீனாவால் நிபந்தனைபற்ற ஆதரவை வழங்க முடிந்தது. இறுதி யுத்தத்தின் போது எவ்வாறு சீனா கொழும்பிற்கு ஆதரவாக இருந்ததோ, அவ்வாறானதொரு நிலையில் தான் சர்வதேச ரதுியிலும் போர் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் ராஜதந்திர பணியையும் சீனா தொடர்ந்தும் ஆற்றிவருகின்றது. சிறிலங்காவின் போலீக் குற்றவாளிகளை பாதுகாப்பதில் சீனா ஏன் இந்தளவு தீவிரமாக இருக்கின்றது? ஏனெனில் தமிழர்களுக்கு எதிரான இறுதி யுத்தத்தில் சீனாவின் கரங்களும் இருக்கின்றன.

இந்த இடத்தில் தான், தமிழர்களின் மனித உரிமை சார்ந்த விவகாரம் சீன மேற்குலக மோதலுடன் தொடர்புறுகின்றது. இந்த இடத்தில் நாம் ஒரு விடயத்தை ஆழமாகப் பார்க்க வேண்டும். ஒரு வேளை மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அமெரிக்கா, இராணுவ உதவிகளை வழங்கியிரக்குமாக இருந்தால், என்ன நடந்திருக்கும்? இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தில் அமெரிக்காவினால் தலையீடு செய்ய முடிந்திருக்குமா? அதே போன்று தான் இந்தியாவும் 2021இல் அமெரிக்கா இலங்கையின் மீது பொறுப்புக்கூறல் தொடர்பான பிரேணை ஒன்றை முன்வைத்ததற்கு, பின்னால் பெய்ஜிங் கொழும்பு நெருக்கமும் ஒரு பிரதான காரணமாகும். ஏனெனில் சீனாவின் ஆதரவுடன் வெற்றி பெற்ற யுத்தத்தின் போது, இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொலீடர்பிலே மேற்குலகம் சிறிலங்காவின் மீது விமர்சனங்களை முன்வைத்து. அந்த அடிப்படையில் தான் சிறிலங்காவின் மீதான மேற்குலக அழுத்தங்கள் இப்போதும் தொடர்கின்றன.

சீனா ஏன் இஙல்கையை ஒரு இலக்காகத் தெரிவுசெய்தது? 2013ஆம் ஆண்டிலிருந்து சீனா, அதன் “ஒரு சுற்று ஒரு பாதை” (Belt and Road Initiative) திட்டத்தின் அடிப்படையில், அரசியல் பொருளாதார ஊடாட்டங்களை, தெற்காசியாவை நோக்கி விஸ்தரிக்கத் தொடங்கியது. இதனடிப்படையில் தான் இலங்கைத் தீவின் மீதான சீனா ஆர்வம் துளிர்விட்டது. இலங்கையின் சமாதான முன்னெடுப்புக்களின் போக்கை உன்னிப்பாக அவதானித்து வந்த சீனா, 2005 இல் மீண்டும் யுத்தம் ஆரம்பித்த போது இலங்கையைத் தனது மூலோபாயத் திட்டத்திற்குள் கொண்டு வருவதற்கான காய்களை நகர்த்தியது. விடுதலைப் புலிகளை முற்றிலுமாக இல்லாமலாக்கும் ராஜபக்சக்களின் ஆசைக்கு முழுமையாத் தோள் கொடுத்து. ஏற்கனவே குறிப்பிட்டவாறு, அமெரிக்காவினதும் இந்தியாவினதும் எட்ட நிற்கும் அணுகுமுறையை சீனாவோ தனது இலங்கையை நெருங்குவதற்கான துருப்புச் சீட்டாக பயன்படுத்திக்கொண்டது.

“ஒரு பாதை ஒரு சுற்று“ மூலோபாயத்தின் அடிப்படையில் சீனா, தெற்காசியாவில் நான்கு பொருளாதார அரங்குகளை திறந்திருக்கின்றது. பங்களாதேஸ் சீனா இந்தியா மியன்மார் பொருளாதார அரங்கு; சீனா பாக்கிஸ்தான் அரங்கு; கிமாலயன் அரங்கு மற்றும், பங்களாதேஸ் சிறிலங்கா மாலைதீவு ஆகிய நாடுகளுடன், 21ம் நூற்றாண்டிற்கான பாட்டுப்பாதைத் திட்டத்திற்கான இருதரப்பு ஒத்துழைப்பு அரங்கு.  (China- Pakistan Economic Corridor, the Bangladesh- China – India Myanmar Economic Corridor, the Trans-Himalayan Corridor, and bilateral cooperation with Bangladesh, Sri Lanka, and the Maldives under the 21st Century Maritime Silk Road)

இலங்கையில் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் சீனா வலுவாக காலூன்றிவிட்டது. ஆட்சி மாற்றங்களால் சீனாவைக் கட்டுப்படுத்த முடியும் என்னும் எல்லைக் கோட்டை சிறிலங்கா எப்போதோ தாண்டிவிட்டது. இந்தப் பின்புலத்தில்தான் சீனாவை ஒரு வரையறைக்குள் முடக்கும் அமெரிக்க மூலோபாயத்தின் பக்கமாக நாம் திரும்ப வேண்டியிருக்கின்றது. தமிழரின் அரசியல் எதிர்காலம் இந்த விடயத்துடன் நேரடியாக தொடர்புறுகின்றது.

தெற்காசியாவைப் பொறுத்தவரையில் அமெரிக்க மூலோபாயம் என்பது இந்தியாவை அடிப்படையாகக் கொண்டது. இந்தியா என்னும் அச்சாணியில் தான் அமெரிக்க மூலோபாயம் சுழல்கின்றது. ஒரு உலகளாவிய சக்தி என்னும் வகையில் அமெரிக்காவிற்கென பிரத்தியேக மூலோபாய அணுகுமுறைகள் நிச்சயம் இருக்கும், ஆனாலும், சீனாவை ஒரு எல்லைக்குள் முடக்கும் அமெரிக்க மூலோபாயத்தில் இந்தியா ஒரு தவிர்க்க முடியாத சக்தியாகவே நோக்கப்படுகின்றது.

ஏனெனில் தெற்காசியாவை நோக்கிய சீன விஸ்தரிப்பானது, அடிப்படையில் இந்தியாவிற்கான மூலோபாய நெருக்கடியாகும். சீனாவின் வளர்ச்சி வேகத்தோடு ஒப்பிட்டால் இந்தியா அதிக தூரத்தில் இருக்கின்றது. எனவே சீனாவை எதிர்கொள்ளுவதற்கு இந்தியாவிற்கு ஒர வலுாவன கூட்டு கட்டாயம் தேவை. அதே போன்று ஆசியாவில் அமெரிக்காவின் செல்வாக்கை மீளவும் உறுதிப்படுத்துவதற்கு, ஆசியாவில் இரண்டாம் நிலையிலுள்ள அதிகாரமான இந்தியாவின் ஆதரவும் ஒத்துழைப்பும் அமெரிக்காவிற்கு தேவை. இந்த பின்புலத்தில் தான் அமெரிக்காவின் இந்தோ பசுபிக் மூலோபாயம் வகுக்கப்பட்டது. இந்தோபசுபிக் என்பதன் பெயரிலிருந்தே. இந்தியாவின் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ளலாம். இந்தோ பசுபிக் மூலோபாயத்தின் ஒரேயொரு இலக்கு, சீனாவை ஒரு எல்லைக்குள் முடக்குவது தான். 2017 இல் வெளியிடப்பட்ட அமெரிக்க பாதுகாப்பு மூலோபாய அறிக்கையில் இதனைத் தெளிவாகக் காணலாம் அடிப்படையில் இந்தோபசுபிக் என்பது இராணுவ ரீதியான ஒரு மூலோபாயமாகவே நோக்கப்படுகின்றது.

இந்தோ பசுபிக் கூட்டில் இணைந்திருக்கும் நாடுகளான இந்தியா, யப்பான், அவுஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளுக்கிடையில் இராணுவ ஒத்துழைப்புக்களை மேலும் வலுப்படுத்திக்கொள்ளும் நோக்கில் உருவாக்கப்பட்டதே குவாட் (QUAD) எனப்படும் இராணுவ ஒத்துழைப்பு மூலோபாயம்.

ஒரு தசாப்தத்திற்கு முன்பான அமெரிக்க அணுகுமுறையை நோக்கினால், சீனாவுடன் ஊடாடும் (engagement) அணுகுமுறையே அமெரிக்கா கைக்கொண்டிருந்தது. அதாவது, சீனாவுடன் ஊடாடுவதன் மூலம் சீனாவை ஒரு சுதந்திர ஜனநாயக நாடாக நிலைமாற்றலாம் என்னும் எதிர்பார்ப்பே அமெரிக்க மூலோபாய சமூகத்தினரிடம் இருந்தது. ஆனால் எதிர்பார்த்தது போன்று சீனாவைத் தாராளவாத உலக ஒழுங்கோடு இணைக்கும் முயற்சிகள் எவையும்.

வெற்றியளிக்கவில்லை. 2009இல் பராக் ஒபாமா ஜனாதிபதியானதைத் தொடர்ந்து, சீனாவுடன் ஒத்துழைப்பது தொடர்பில் அதிக எதிர்பார்ப்பக்கள் வெளியிடப்பட்டன. ஒபாமா நிர்வாகம் சீனாவுடன் ஊடாடும் அமெரிக்க கொள்கையை மேலும் உறுதிப்படுத்திக் கொள்ளும் (engagement and reassurance) வகையில் செயற்பாடுகளை முன்னெடுத்தது. ஆனால் ஒபாமாவின் கொள்கை நிலைப்பாடு அதிக காலம் நீடிக்கவில்லை.

அமெரிக்க அரசியல் சிந்தனையாளர்கள் ஒபாமாவின் சீனா தொடர்பான அணுகுமுறை தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். ஒபாமாவின் அணுகுமுறைகள் சீனாவிற்கு அதிகம் விட்டுக்கொடுப்பதாகவும், ஆனால் சீனாவோ அதனை சுரண்டிக் கொள்வதாகவும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். இவ்வாறானதொரு பின்புலத்தில் தான் அமெரிக்கா அதுவரையில் சீனா தொடர்பில் கடைப்பிடித்து வந்த கொள்கை நிலைப்பாட்டை, ஒபாமா நிர்வாகம் மாற்றியமைக்கின்றது. இதனடிப்படையில் ஒபாமா நிர்வாகம் ஆசிய மையக் கொள்கையை முன்வைக்கின்றது. ஆசிய மையக் கொள்கையின் இலக்கு, ஆசியாவில் எழுச்சியடைந்து வரும் சீனாவின் செல்வாக்கை மீளவும் சமநிலைப்படுத்துவதாகும். 2010 11 காலப்பகுதியிலேயே ஆசிய மையக் கொள்கை முதன்மைப் படுத்தப்படுகின்றது. இது தொடர்பில் 2011இல் அப்போதைய அமெரிக்க ராஜாங்கச் செயலர் ஹலாரி கிளின்ரன், எழுதிய “பசிபிக் நூற்றாண்டு” என்னும் கட்டுரையில், அமெரிக்காவின் தலைமைத்துவத்திற்காக ஆசியா ஏங்கிக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இவ்வாறானதொரு சூழலில் தான் சிறிலங்காவின் இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக் கூறலை வலியுறுத்தி, இலங்கையின் மீதான பிரேரணை ஒன்றிற்கு அமெரிக்கா அனுசரணை வழங்குகின்றது. இதன் மூலம் இலங்கையின் மீதான சர்வதேச அழுத்தத்திற்கான பிள்ளையார் சுழியை அமெரிக்கா வரைந்தது. இந்த பிள்ளையார் சுழியே தமிழர் தேசத்தின் அரசியலை சர்வதேச மயப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கியது.

இந்த விடயங்களைத் தொகுத்து நோக்கும் போது, எவ்வாறு அமெரிக்க சீன உளகளாவிய முறுகல் நிலைமை பிறிதொருபுறம் உலகளாவிய மனித உரிமை சார்ந்த கரிசனையாகவும் இருக்கின்றது. என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். இந்த கரிசனையே பிறிதொருபுறம், தமிழர்களின் நீதி கோரும் போராட்டத்திற்கு சாதகமாகவும் இருக்கின்றது. ரூடவ்ழத்தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையை, நாம் உயர்த்திப் பிடிக்கும் போது பிறிதொரு புறம், சீனாவின் உய்குர் மானிலத்தில் வாழும் முஸ்லிம் மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளாகிவருவதாக சீன அரசின் மீது, அமெரிக்கா குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதையும் நாம் இந்த இடத்தில் கவனித்துக்கொள்ள வேண்டும். சீனாவின் இராணுவ உதவிகளோடு தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற யுத்தத்தின் போது தான் தமிழ் மக்கள் இனப்படுகொலைக்கு ஆளாகியுள்ளனர் என்னும் வாதத்தையே நாம் உலகெங்கும் உயர்த்திப்பிடிக்க வேண்டும். சிறிலங்கா தொடர்ந்தும் சீனாவுடன் நெருங்கிச் செல்வதும், மறுபுறமாக சீனா, சிறிலங்காவைச் சர்வதேச ரீதியாகப் பாதுகாக்க முற்படுவதையும் முன்வைத்தே எமது லொபியை நாம் திட்டமிட வேண்டும். அதாவது, ஈழத் தமிழர் தேசமானது, சிறிலங்கா சீனா அரச கூட்டினால் பாதிக்கப்பட்டவர்களாக (Victim) தங்களை, மேற்குலகில் அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் தான் நாம் மேற்குலகத்தின் நேச வளையத்திற்குள் எப்போதும் இருக்க முடியும்.

மேலே குறிப்பிட்டவாறு இது அடிப்படையில் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேற்குலகிற்கும் இடையிலான போட்டியல்ல. மாறாக, சீனாவின் எதிர்தாராளவாத (Illiberal) உலகிற்கும், மேற்குலகின் தாராளவாத உலக ஒழுங்கிற்கும் இடையிலான மோதலாகும், இந்த மோதலில் தமிழர்களுக்கான நேச சக்திகள் எப்போதுமே தாராளவாத ஜனநாயக நாடுகள்தான். இந்த விடயத்தில் கொள்கை சார்ந்த நிலைப்பாடு தமிழர் தேசத்திற்கு அவசியம். இதில் எக்காலத்திலும் தமிழர்கள் தடுமாறக் கூடாது. அதே வேளை சீன எதிர்நிலை என்பதும் எப்போதுமே தமிழர்களிடம் இருக்கவேண்டும். ஏனெனில் சீனா இறுதி யுத்தத்தை மிகவும் கொடூரமான முறையில் முடிப்பதற்காக இராணுவ உதவிகளை வழங்கிய நாடு. சிறிலங்காவின் போர்க் குற்றவாளிகளைச் சர்வதேச அரங்கில் தொடர்ந்தும் பாதுகாப்பதில் உறுதியுடன் செயற்பட்டுவரும் நாடு. சிறிலங்கா அரசுடன் தொடர்ந்தும் உறவுகளைப் பலப்படுத்திக்கொண்டுவரும் நாடு. இவ்வாறான ஒரு நாடு, வடக்கு கிழக்கிற்குள் காலூன்ற முற்படுவதைப் புலப்பெயர் சமூகம் எவ்வாறு அனுமதிக்க முடியும்?

2009இல் விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர், சர்வதேச சமூகத்தை அணுகுவதற்கு இருந்த ஒரேயொரு வாய்ப்பு, புலப்பெயர் சமூகம் மட்டும்தான். இன்று ஈழத்தமிழ் புலப்பெயர் சமூகம் என்பது, ஒரு ஐரோப்பிய மைய தமிழர் சமூகமாக திரட்சி பெற்றிருக்கின்றது. இது மேற்குலக தாராளவாத உலகத்தைக் கையாளுவதற்கான ஒரு தமிழர் பலமாகும். இந்த பலத்தை நாம் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஐரோப்பிய மைய மக்கள் திரட்சியைப் பிரதிபலிக்கும் ஒரு சிறந்த வடிவமாகவே நாடுகடந்த தழிழீழ அரசாங்கம் இருக்கின்றது. நாம் தாராளவாத மேற்குலகத்துடனும் ஊடாட வேண்டும், அதே வேளை தமிழர்களுடைய அடிப்படையான தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்பதிலும் சமரசம் செய்யக்கூடாது.

இவ்வாறானதொரு பொறிமுறையை நாம் வகுத்துக் கொள்வதன் ஊடாகவே, எமது இலக்கு நோக்கி நாம் பயணிக்க முடியும். புவிசார் அரசியல் மூலம் கிடைக்கும் வாய்ப்புக்கள் என்பது கத்தியின் மேல் நடப்பது போன்றது. எந்த நேரத்திலும் நாம் விழுந்தவிடலாம். அதே வேளை சர்வதேச உறவுகளைக் கையாளுவதில் ஒரு அரசிற்கு இருக்கும் வாய்ப்புக்கள், அரசற்ற சமூகமான ஈழத்தமிழர் தேசத்திற்கு இல்லை. ஆனால் விடயங்களைத் துல்லியமாக கணித்து, சமயோசிதமான தீர்மானங்களை எடுப்பதன் மூலம், விடயங்களை வெற்றிகரமாக கையாளும் திறனை நாமும் பெறமுடியும். களத்திலும் புலத்திலும் ஒரு வலவான அதே வேளை சூழ்நிலைமைகளுக்கு ஏற்ப, காய்களை நகர்த்தக்கூடிய கூட்டுத் தலைமை ஒன்று கட்டாயமானது. அப்படியான ஒரு தலைமைத்துவத்தை நோக்கி ஈழத் தமிழர் தேசம் நகர வேண்டும். கூட்டுப் பொறுப்பும் அதே வேளை, சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தந்திரோபாயமாகச் செயலாற்றும் தலைமை ஒன்று தமிழர்களிடம் இல்லாவிட்டால், எத்தனை வாய்ப்புக்கள் வந்தாலும் எவ்வித பயனும் கிட்டாது. இது ஓர் உரையாடலுக்கான முனவரைபு மட்டுமே. இது தொடர்பில் விரிவான உரையாடல்கள் களத்திலும் புலத்திலும் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.