Mai 20, 2024

கனடிய உயர்ஸ்தானிகரை நாட்டிலிருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும்

வடக்கிற்கு சென்று, தமிழ் மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடிய கனடிய உயர்ஸ்தானிகரை நாட்டிலிருந்து அரசாங்கம் உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றிய அவர், உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை அமெரிக்காவும் கனடாவும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஏற்ப இந்நாட்டை பிரிக்க நாம் இடமளிக்கப் போவதில்லை. 13 ஆவது திருத்தச்சட்டம் என்பது எம்மீது இந்தியாவினால் பலவந்தமாக திணிக்கப்பட்ட ஒன்றாகும். இந்து- லங்கா ஒப்பந்தம் இன்று செல்லுபடியற்ற ஒன்றாகவே கருதப்படுகிறது.

ஏனெனில், இந்தியா இலங்கைக்கு வழங்கிய தனது நிபந்தனைகளை முழுமையாக நிறைவேற்ற வில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவாகும்.

புலிகளின் கட்டுப்பாட்டில் வடக்கு – கிழக்கு இருந்துபோது, அங்கு வாழ்ந்த தமிழ் மக்கள் மகிழ்ச்சியாகவா வாழ்ந்தார்கள்?

நாம் அம்மக்கள் அன்று வாழ்ந்த விதத்தை நேரில் கண்டுள்ளோம். இன்று அந்த நிலைமை மாற்றமடைந்துள்ளது.

கல்வியில் முன்னேறியுள்ளார்கள். செல்வந்தர்களாக இருக்கிறார்கள். நன்றாக தொழில் செய்கிறார்கள்.

வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். தெற்கில் சொத்துக்களை வாங்குகிறார்கள். மேலும் 52 வீதமான தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் இணைந்துதான் இங்கு வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி இருக்கையில், இவர்களுக்கு உள்ள பிரச்சினை என்ன? யுத்தத்திற்கு பின்னர் வடமாகாணம் 22 வீதமாக வளர்ச்சியடைந்தது.

அரசாங்கமானது இங்கு அபிவிருத்திப் பணிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் நிலையில், ஜனாதிபதியை சந்தித்து இல்லாதப் பிரச்சினைகளை உருவாக்க முயற்சிக்க வேண்டாம் என்று நான் தமிழ் அரசியல்வாதிகளிடம் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் அரசியல்வாதிகள் பொய் கூற என்றும் அஞ்சியதில்லை. ஆனால், சிங்கள அரசியல்வாதிகள் உண்மையைக் கூற தொடர்ச்சியாக அஞ்சினார்கள்.

இதனால்தான் இவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. சர்வதேச நாடுகளும் இவர்களின் பொய்களை நம்பி ஏற்றுக் கொண்டுள்ளன.

ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வுக்கு செல்ல வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுகிறது.

அமெரிக்கா போன்ற பெரிய நாடுகளில், மத்திய அரசாங்கத்தினால் மட்டும் நிர்வாகத்தை மேற்கொள்ள முடியாது என்ற காரணத்தினால்தான் மாநில அரசாங்கங்களுக்கும் அதிகாரம் வழங்கப்படுகிறது.

ஆனால், இலங்கை என்பது சிறிய நாடாகும். இங்கு அதிகாரப் பகிர்வை மேற்கொள்வது உண்மையில் நகைப்புக்குரிய விடயமாகவே கருதப்படுகிறது.

இன்று கனடா, அமெரிக்கா போன்ற நாடுகள் எமது உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுகின்றன. 2000 ஆயிரம் ஆண்டுகள் பழமையான குருந்தூர்மலையில் சில அரசியல்வாதிகள் சிவலிங்கத்தை வைத்து பூஜை செய்து, தேவையில்லாத இன- மத மோதல்களை ஏற்படுத்த முயல்கிறார்கள்.

இப்படியான அரசியல்வாதிகளை கனடா உயர்ஸ்தானிகர் சென்று சந்தித்தமையானது, சிங்கள மக்களுக்கு இழைத்த துரோகமாகும்.

இவரை நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று நாம் இங்கு வலியுறுத்துகிறேன். அத்தோடு, அமெரிக்க தூதுவர் ஜுலி சங்கும், வடக்கிற்கு சென்று தமிழ் பிரிவினைவாத அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்துள்ளார்.

ஏனைய நாடுகள் தங்களது சுயாதீனத்தை இறுக்கமாக பாதுகாக்கும். நாம் பொருளாதார ரீதியாக எவ்வளவு பலவீனமாக இருந்தாலும், எமது சுயாதீனத்தை பாதுகாக்க தவறிவிடக் கூடாது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert