April 27, 2024

மாவையை வீடு செல்ல கோருகிறது சங்கம்!

தாங்கள் மாவையை ராஜினாமா செய்யுமாறு வலியுறுத்துவதாக தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க செயலாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

செப்டம்பரில் ஜெனீவா கூட்டத்தை முன்னிட்டு, எம்.ஏ.சுமந்திரன் இலங்கையில் சிங்கள புத்திஜீவிகளை சந்திக்க தனியாக செல்கிறார் என்று கேட்பது மிகவும் அபாயமானது. கட்சி அனுமதி இல்லாமல் அவரால் தனியாக செயல் பட முடியாது. இங்கே எதையும் மறைக்க ராஜதந்திரம் தேவை இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, கடந்த 74 வருட அனுபவத்தில் சிங்களத்துடன் பேசுவது பயனற்றது என்பது வரலாறு.

தென் சூடான், கொசோவோ, போஸ்னியா, கிழக்கு திமோர் மற்றும் முன்னர் பாதிக்கப்பட்ட மற்ற நாடுகள் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை மட்டுமே பயனுள்ளதாக உலகத்துக்கு காட்டின.

மாவை அவரது முந்தைய கட்சித் தலைவர் தந்தை செல்வா போல் நடந்து கொள்ள வேண்டும். அவரால் முடியாவிட்டால், அவர் தலைமையை ராஜினாமா செய்து கட்சியை கட்டுப்படுத்தக்கூடிய ஒருவருக்கு கொடுக்க வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் தாய்மார்கள் நாங்கள், திரு சுமந்திரனை நம்பவில்லை. 2017 பெப்ரவரி 09 இல், பாதுகாப்பு அமைச்சர் திரு. ருவன் விஜேரத்ன எங்களை அழைத்தார். சுமந்திரன் எங்கள் சந்திப்புக்கு வந்து பாதுகாப்பு அமைச்சருடனான எங்கள் சந்திப்பை குழப்பிவிட்டார். இதுவே சுமந்திரனின் இயல்பாகும்.

சுமந்திரன் தமிழர்களை விரும்பாத நபர். தமிழர்களிடையே வாழ்வது தனக்கு அவமானம் என்று சொன்னவர் .

சுமந்திரன் தமிழர் தாயகத்தில் சிங்களவர் வாழ வேண்டும் என்று விரும்புவர் , அதை நிரூபிக்க அவர் நல்லாட்சி என்று அழைக்கப்படும் போது வவுனியா, நெடுங்கேணியில் சிங்கள குடும்பத்திற்கு 4000 காணி உறுதிப்பத்திரங்களை மைத்திரியுடன் சேர்ந்து வழங்கியவர் .சுமந்திரன் என்பவர் வட கிழக்கு இணைப்பை விரும்பாதவர் மற்றும் கிழக்கு மாகாண சபை அதிகாரத்தை முஸ்லீம் (7 அங்கத்தினர்) வழங்கினார், அங்கு அப்போது தமிழர்கள் (13 அங்கத்தினர்) பெரும்பான்மையாக இருந்தனர்.

சுமந்திரன் மற்ற மதங்களை விரும்பியதில்லை, பாராளுமன்றத்தில் புத்ததிற்கு முதலிடம் கொடுத்தார்.

சுமந்திரம் சர்வதேச விசாரணை முடிந்துவிட்டது என்று சொன்னவர், இப்போது தமிழர்களுக்கு உள்நாட்டு தீர்ப்பை வழங்க வேண்டும் என்பவர் . இது ஒரு பெரிய பொய், முள்ளிவாய்க்காலில் இறந்த தமிழர்களை அவர் எவ்வளவு வெறுக்கிறார் என்பதை இது காட்டுகிறதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.