லண்டனுக்கு ஓடி வந்த இந்திய கோடீஸ்வரர்! நாடு கடத்துவது குறித்து பிரித்தானிய அதிகாரி முக்கிய விளக்கம்

கடனுக்கு பயந்து லண்டனுக்கு ஓடி வந்த இந்திய கோடீஸ்வரர் விஜய்மல்லையா நாடு கடத்துவது குறித்து, பிரித்தானிய அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

மதுபான ஆலை, விமான நிறுவனம் என பல்வேறு தொழில்கள் நடத்தி வந்த விஜய் மல்லையா இந்தியாவில் இருக்கும் பல பொதுத்துறை வங்கிகளில் 9000-க்கும் கோடிக்கும் அதிகமாக கடன் பெற்று செலுத்தவில்லை.

இதனால் அவர் பிரித்தானியாவின் தலைநகரான லண்டனுக்கு தப்பிச் சென்றார். இதையடுத்து, இவர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தது.

இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு, லண்டன் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்து இருந்தது.

இவர் மீது சிவப்பு எச்சரிக்கையும் விடப்பட்டிருந்தது. வெளிநாட்டிற்கு தப்பி ஓடியவர் என்று குறிப்பிட்டிருந்தது. அடைக்கலம் கேட்டால் கொடுக்க கூடாது என்று பிரித்தானியர அரசிடம் இந்திய அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது.

இந்நிலையில் வங்கியில் வாங்கிய 9000 கோடியை வட்டியுடன் சேர்ந்து 13,960 கோடியாக வங்கிகள் கூட்டமைப்பில் செலுத்தி விடுவதாக சமீபத்தில் விஜய் மல்லையாக கூறியுள்ளதாக அவரின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதற்கிடையில், மல்லையாவை, இந்தியாவுக்கு நாடு கடத்தி அழைத்து வருவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

இதையடுத்து தற்போது, விஜய் மல்லையாவை, இந்தியாவுக்கு நாடு கடத்தி அழைத்து வருவதற்கான காலக்கெடு எதுவும் நிர்ணயிக்க முடியாது பிரிட்டன் துாதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.’

டில்லியில் உள்ள பிரித்தானிய துாதரக அதிகாரி பிலிப் பர்டோன், மல்லையா விவகாரத்தில், பிரித்தானியாவில், சில சட்டச் சிக்கல்கள் நிலுவையில் உள்ளன. அவை முடிந்தால் மட்டுமே, அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தி அழைத்து வர முடியும்.

எனவே, மல்லையா இந்தியாவுக்கு எப்போது அழைத்து வரப்படுவார் என, காலக்கெடு எதுவும் நிர்ணயிக்க முடியாது. மல்லையாவுக்கு, பிரித்தானிய அரசு சார்பில் அரசியல் அடைக்கலம் தரப்படுமா என்பது குறித்து, எதுவும் தெரிவிக்க முடியாது. தனி நபரின் அரசியல் அடைக்கலம் குறித்து, நான் எதுவும் தெரிவிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.