März 28, 2025

மன்னார் மற்றும் மடு கல்வி வலயங்களில் ஆசிரியர்கள் போராட்டம் முன்னெடுப்பு

 

ஆசிரியர் தினமாகிய இன்று புதன் கிழமை (6) நாடு முழுவதும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.அதற்கமைவாக இன்றைய தினம் புதன் கிழமை காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டத்திலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் மற்றும் மடு கல்வி வலயங்களில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

-மன்னார் வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாகவும்,ஆண்டங்குளத்தில் அமைந்துள்ள மடு கல்வி வலயத்திற்கு முன்பாகவும் குறித்த போராட்டம் இடம்பெற்றது.

குறித்த போராட்டமானது ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்க கோரியும், ஆசிரியர் – அதிபர் சம்பள பிரச்சினைகளுக்கு 87 நாட்கள் அரசாங்கம் தீர்வு வழங்காமையினால் இன்றைய தினம் புதன் கிழமை (6) ஆசிரியர் தினத்தை முன்னிட்டு குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

-மன்னார் மற்றும் மடு கல்வி வலையத்தில் உள்ள அனைத்து ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்களும் இணைந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இலவச கல்விக்கு 6 வீதம் நிதி ஒதுக்கு, இலவசக் கல்வியை தனியார் மயப்படுத்தாதே, ஆசிரியர் தொழில் கௌரவத்தை உதாசீனப்படுத்தாதே, ஐந்தாயிரம் ரூபாய்க்கு அடிபணிய மாட்டோம், போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம், ஆசிரியர் சேவைகள் சங்கம் மற்றும் அதிபர்கள் கலந்து கொண்டனர்.