Oktober 23, 2024

மீண்டும் கொன்று கடலில் வீசும் கலாச்சாரமா?

மீண்டும் வடகிழக்கில் காணாமல் ஆக்கி கடலில் வீசும் கலாச்சாரம் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளதாவென்ந சந்தேகம் எழுந்துள்ளது.

பூநகரி சங்குப்பிட்டி கடற்பரப்பில் சர்ச்சைக்குரிய வகையில் காணப்பட்ட சடலம் கிளிநொச்சி பதில் நீதவான் முன்னிலையில் இன்றைய தினம் காலை மீட்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டம், பூநகரி சங்குப்பிட்டி பாலத்திற்கருகில் நேற்றைய தினம் கைகள், கால்கள் நைலோன் கயிற்றினால் கட்டப்பட்டு வலையினால் சுற்றப்பட்ட நிலையில் சடலம் ஒன்று காணப்பட்டது.

குறித்த சடலம் அடையாளம் காண முடியாதளவுக்கு உருக்குலைந்த நிலையில் காணப்பட்டது.

அந்நிலையில் இன்றைய தினம் காலை 11.30 மணியளவில் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் பதில் நீதவான் சதீஸ்குமார் விஜயராணி முன்னிலையில் பூநகரி பொலீஸாரினால் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஒருபுறம் இந்திய மீனவருடையதாவென்ற சந்தேகம் எழுப்பப்பட்டாலும் அதனை உள்ளும் மீனவர்கள் மறுதலித்துள்ளனர்.

தீவகப்பகுதிகளில் கடந்த காலங்களில் காணாமல் ஆக்கப்பட்ட பலர் கடலில் கொன்று வீசப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டமை தெரிந்ததே.