März 28, 2025

பருத்தித்துறையில் மாயமான 70 பேர்-

பருத்தித்துறை நகர் வர்த்தக தொகுதியில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 6 வர்த்தகர்கள் தலைமறைவாகிய நிலையில் அவர்களுடன் பணியாற்றிய 70 பேரைக் காணவில்லை என சுகாதாரத் துறையினர் தேடி வருகின்றனர்.

அவர்கள் சமூகத்தில் நடமாடுவதால் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என சுகாதாரத் துறையினர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

பருத்தித்துறை நகரில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட 6 வர்த்தகர்களும் புத்தளம் மற்றும் காத்தான்குடியைச் சேர்ந்தவர்கள். பருத்தித்துறை நகர் வர்த்தக தொகுதியில் 23 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 7 வர்த்தகர்களுக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று வெள்ளிக்கிழமை கண்டறிப்பட்டுள்ளது.

அதனையடுத்து தொற்றாளர்களை அடையாளம் கண்டு கொவிட்-19 இடைத்தங்கல் முகாமுக்கு அனுப்பும் பணியில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்ட போது 6 வர்த்தகர்கள் தலைமறைவாகியுள்ளனர். அவர்கள் 6 பேரும் பி.சி.ஆர் மாதிரிகளை வழங்கிய நிலையில் தமது சொந்த ஊரான புத்தளம் மற்றும் காத்தான்குடிக்கு சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவர்களுடன் பணியாற்றியவர்களை சுயதனிமைப்படுத்த சென்றபோது அவர்களும் தலைமறைவாகியுள்ளனர். அவ்வாறு சுயதனிமைப்படுத்துவதற்காக 70 பேரின் விவரங்களுடன் சுகாதாரத் துறையினர் பொலிஸாரின் உதவியை நாடியுள்ளனர்.

இதேவேளை, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றத்துக்கு குறைந்தது ஒரு ஆண்டு சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.