Mai 17, 2024

வாக்குறுதியை மீறிய ஹரி: கடும் கோபத்தில் இளவரசர் வில்லியம்

வாக்குறுதியை மீறிய ஹரி: கடும் கோபத்தில் இளவரசர் வில்லியம்

மறைந்த தாயார் டயானா தொடர்பில் இனி ஒருபோதும் பொதுவெளியில் பேசக்கூடாது என்ற வாக்குறுதியை இளவரசர் ஹரி மீறியதால் வில்லியம் கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இளவரசர்கள் வில்லியம்- ஹரி சகோதரர்கள் இருவரும் தங்களது தாயார் டயானா தொடர்பில் இனி ஒருபோதும் பொதுவெளியில் கருத்துக் கூறுவதில்லை என்ற முடிவுக்கு வந்திருந்தனர்.

2017-ல் டயானாவின் 20ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட ஆவணப்படத்திலேயே சகோதரர்கள் வில்லியம்- ஹரி ஆகியோர் இது தொடர்பில் உறுதி எடுத்திருந்தனர்.

அதன் பின்னர் இருவரும் அந்த வாக்குறுதியை மீறவில்லை என்பது மட்டுமல்ல, அதற்கான வாய்ப்புகள் அமைந்தும் இளவரசர் வில்லியம் மறைந்த தாயார் தொடர்பில் அமைதி காத்தே வந்துள்ளார்.

ஆனால் கடந்த வாரம் இளவரசர் ஹரி அந்த வாக்குறுதியை மீறியதுடன், இளவரசி டயானா தொடர்பிலும், குடும்பம் தொடர்பில் விளக்கமாக பேசியுள்ளார்.

மிக சாதாரண வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதே தாயார் டயானாவின் ஆசை எனவும், அவர் உயிருடன் இருந்த காலம் வரையில் மிக அழுத்தமான பாதிப்பை தங்களில் ஏற்படுத்திச் சென்றதாகவும் ஹரி குறிப்பிட்டுள்ளார்.

மட்டுமின்றி, ஓப்ரா வின்ஃப்ரே உடனான இன்னொரு ஆவணப்படத்தில் இளவரசர் ஹரி, தமது தாயார் டயானாவின் இறப்பு தொடர்பில் பேசியுள்ளதும் தெரிய வந்துள்ளது.

இது அரச குடும்பத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், 1997ல் டயானாவின் இறுதிச்சடங்கு தொடர்பில் ஹரி சர்ச்சையை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக பத்திரிகை ஒன்று சந்தேகம் எழுப்பியுள்ளது.

மட்டுமின்றி, தாயாரின் இறுதி ஊர்வலத்தில் இளம் சகோதரர்கள் இருவரை கிலோ மீற்றர் தொலைவுக்கு பிந்தொடர எடுக்கப்பட்ட முடிவு குறித்து பக்கிங்ஹாம் அரண்மனை விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

இந்த விவகாரங்களுக்கு நடுவே ஜூலை மாதம் வில்லியம்- ஹரி சகோதரர்கள் ஒன்றாக டயானாவின் 60ம் பிறந்த நாளை முன்னிட்டு கென்சிங்டன் அரண்மனை தோட்டத்தில் சிலை ஒன்றை நிறுவ உள்ளனர்.

தற்போது ஹரி விவகாரத்தில் மனக்கசப்புடன் காணப்படும் இளவரசர் வில்லியம், இந்த விழாவை முன்னெடுப்பாரா அல்லது சகோதரர்கள் ஒன்றிணைவார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது.