März 28, 2025

கடத்தப்பட்ட வாகனம் மீட்பு! நபரும் கைது!

வவுனியா, இலுப்பையடிப் பகுதியில் வைத்து நேற்றுப் புதன்கிழமை மாலை கடத்தப்பட்ட சிறிய ரக வாகனம் வவுனியா காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.வவுனியாவிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு பொருட்களை விநியோகம் செய்யும் சிறிய ரக வாகனம் ஒன்றை நிறுத்தி விட்டு பொருட்களை விநியோகம் செய்து கொண்டிருந்த போது அங்கு வந்த நபர் ஒருவர் இயங்கு நிலையில் இருந்த குறித்த வாகனத்தை  எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து விநியோகஸ்தர்களால் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், அங்கிருந்து வாகனத்தை எடுத்துச் சென்ற நபர் வவுனியா, மன்னார் வீதி வழியாக குருமன்காடு பகுதியில் பயணித்த போது உந்துருறுயுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போக்குவரத்து காவல்துறையினர் உந்துருறுயில் பயணித்த நிலையில் காயமடைந்தவரை, வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்ததுடன், குறித்த வாகனத்தையும் அதனை செலுத்தி வந்த சாரதியையும் கைது செய்து வவுனியா காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

இதன்போது குறித்த வாகனமே கடத்தப்பட்டதாக குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினரால் தெரிவிக்கப்பட்டதையடுத்து, குறித்த வாகனம் மீட்கப்பட்டுள்ளதுடன், அதனை கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய இளைஞர் ஒருவரையும் வவுனியா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.