März 28, 2025

நல்லூரில் சங்கிலியனை தேடும் படைகள்!

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புதையல் தேடி அகழ்வுகள் இடம்பெற்றனவா எனும் கோணத்தில் பொலிஸார் தீவிர

விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.நல்லூர் – சங்கிலியன் வீதியில் உள்ள வீடொன்றினுள்  இராணுவத்தினர் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட சிலர் நேற்று நண்பகல் அகழ்வு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர் என பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

நீதிமன்ற அனுமதி பெறப்படாத நிலையில் அகழ்வு பணிகளை முன்னெடுக்க முடியாது. அதனால் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

பொலிஸாரின் வருகையை கண்டதும் , அகழ்வு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் அவ்விடத்திலிருந்து தப்பி சென்றுள்ளனர்.

அதனை அடுத்து வீட்டின் உரிமையாளரை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்திய போது முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கியுள்ளார்.

அதனை அடுத்து வீட்டினை பொலிஸார் பார்வையிடட போது , வீட்டினுள் சாமி அறை பகுதியிலேயே அகழ்வு பணிகள் இடம்பெற்றுள்ளன. அதனால் புதையல் தேடி அகழ்வுகள் இடம்பெற்று இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.