März 29, 2025

கலையரசனிடமும் வாக்குமூலம் பெற்ற காவல்துறையினர்!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான எழுச்சிப் பேரணியில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனிடம், இன்று (19) திருக்கோவில் மற்றும் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையங்களின் பொலிஸார், 3 மணிநேர விசாரணை மேற்கொண்டு வாக்குமூலத்தை பெற்றுள்ளனர்.கடந்த 3ம் திகதி தொடக்கம் 6 திகதி வரையிலான பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி எழுச்சி பேரணியில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் கலந்து கொள்வதற்கு எதிராக திருக்கோவில், கல்முனை, அக்கரைப்பற்று பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவு ஒன்றை பெற்று அவரிடம் வழங்கினர்.

அதனை மீறியதாக குற்றஞ்சாட்டியே இவ்வாறு விசாரணை செய்து வாக்கு மூலம் பதிவு செய்தனர்.

இதேவேளை தடை உத்தரவை மீறி பேரணியில் கலந்துகொண்டதாக த.கலையரசனுக்கு எதிராக பொலிஸார் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்து, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ம் திகதி, நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பானை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.