Oktober 23, 2024

13,000 பேருக்கு சோதனை!

யாழ்ப்பாணத்தில் இதுவரை  13 ஆயிரம் பெருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்  சமூகத் தொற்று தொடர்பில் மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்திமூர்த்தி தெரிவித்தார்.யாழ் போதனா வைத்தியசாலையில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தற்போது கொரோனா அபாயம் காணப்படுகின்றது. கம்பஹ மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன் தொடராக வடபகுதியிலும்  சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக மருதங்கேணியில் கடற்தொழிலுக்கு சென்றபோது இந்திய மீனவ படகுகளில் ஏறி உரையாடினார்கள். அதேபோல் பூங்குடுதீவிலும் சிலர் தனிமை படுத்தப்பட்டுள்ளார்கள்.  இவர்களுக்கான பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா தொற்று தொடர்பில் சந்தேகிக்கப்பட்டால் அவர்களுக்கான சிகிச்சைகள் யாழ் போதனா வைத்தியசாலையில் விசேட பிரிவில்  தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.

வடபகுதியில்  தொற்று பரவாமல் இருப்பதற்கு மக்கள் விழிப்பாக  இருக்க வேண்டும். முகக் கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளி பேணுதல் போன்றவற்றை செய்தல் வேண்டும். இது தொடர்பில் மாகாண சுகாதார பணிப்பாளர்களாலும், தொற்று நோய்பிரிவு வைத்திய பிரிவினராலும்  உரிய அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறார்கள்.   ஆகவே மக்கள் அதனை பின்பற்றி வரவேண்டும்.

வடபகுதியில் தொற்று எற்பட்டால் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை மேற்கொள்வதற்கு அனைத்து ஏற்பாடுகளும்   தயார் நிலையில் இருக்கின்றன எனத் தெரிவித்தார்.