März 28, 2025

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரசார கூட்டத்திற்குள் நுழைந்து சரமாரியான தாக்குதல் மேற்கொண்ட குழுவினர்!

கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன் பொதுச் சந்தையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கு கொண்ட மக்கள் மீது முன்னாள் ஈ.பி.டி.பி உறுப்பினர் சந்திரகுமாரின் குழு ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கூட்டமைப்பின் வேட்பாளர் சிவஞானம் சிறீதரன் பங்கேற்ற பரப்புரைக் கூட்டம் நேற்று மாலை அக்கராயன் பொதுச் சந்தைப் பகுதியில் நடைபெற்றுள்ளது.

அவர் உரையாற்றிக் கொண்டிருந்த போது சில நபர்கள் அந்தப் பகுதியில் நின்று கூச்சல் இட்டுக் கொண்டிருந்தனர். இருப்பினும் இடைநிறுத்தாது தொடர்ந்தும் கூட்டம் நடைபெற்றுள்ளது.

அதனையடுத்து பளையில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்திற்காக சிறீதரன் புறப்பட்டுச் சென்ற பின்னர் குறித்த குழு உள்ளே புகுந்து பரப்புரையில் பங்குபற்றிய மக்கள் மீதும் இளைஞர்கள் மீதும் சரமாரியான தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் தேர்தல் கடமைக்காக நின்றிருந்த பொலிசார் முன்னிலையிலுயே இடம்பெற்றுள்ளது. இதன் போது தாக்குதல் நடத்தியவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் மதுபோதையில் இருந்ததாக அறியமுடிகிறது.