சாமானியர்கள் முதல் சர்வதேச தலைவர்கள் வரை பாரபட்சமின்றி அனைத்து தரப்பினரையும் கொரோனா தொற்றிவருகிறது. எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், உயரதிகாரிகள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், சாமானிய மக்கள் என அனைத்து தரப்பினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.

அந்தவகையில், பிரபல இயக்குநர் ராஜமௌலி தனக்கு கொரோனா உறுதியாகியிருப்பதை டுவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார். பாகுபலி மற்றும் பாகுபலி 2 திரைப்படத்திற்கு பிறகு இந்திய சினிமாவின் பிரம்மாண்ட மற்றும் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளவர் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி.

இந்நிலையில், தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் கொரோனா உறுதியானதால் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்த டுவிட்டர் பதிவில், எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் கடந்த சில தினங்களுக்கு முன் லேசான காய்ச்சல் இருந்தது. எனவே கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா இருப்பது உறுதியானது. எனவே மருத்துவர்களின் அறிவுரைப்படி எங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளோம். எங்கள் யாருக்குமே கொரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை. ஆனால் முன்னெச்சரிக்கையாகவும், மருத்துவர்கள் காட்டிய வழிமுறைகளையும் பின்பற்றிவருகிறோம் என்று ராஜமௌலி பதிவிட்டுள்ளார்.

மக்களை தனது வளமான கற்பனையாலும், சிறப்பான மேக்கிங்காலும் பிரம்மாண்டமான திரைப்படங்களை கொடுத்து மகிழ்வித்துவரும் ராஜமௌலி கொரோனாவிலிருந்து விரைந்து குணமடைய வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்துவதுடன், பிரார்த்தனையும் செய்துவருகின்றனர்.