Juli 20, 2024

விரட்டுவோம்: காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்கள்?

கருணாவை நிராகரிக்குமாறு தாயக உறவுகளிடம் வலிந்து காணாமல் ஆக்கபட்டோரது குடும்பங்கள் தாயக மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.

 

ஆயிரம் ஆயிரம் தமிழ் இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டதன் மைய சூத்திரதாரி கருணா மற்றும் பிள்ளையான் குழுவே என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆயினும் தற்போது கிழக்கில் சில முன்னாள் போராளிகள் கருணா தரப்புடன் இணைந்திருப்பதையும் அவர்கள் கவலையுடன் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாங்கள் எங்கள் அன்புக்குரியவர்களைத் தேடி அலைந்து;கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக  போராடி வருகின்றோம். எமது பல உறவுகள் கிழக்கிலே கடத்தப்பட்டும், கைது செய்யப்பட்டும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளார்கள்.அதேபோல்வடக்கில் சரணடைத்தவர்களும், கையளிக்கப்பட்டவர்களும், வலிந்து காணாமலாக்கப்பட்டுள்ளனர். இவர்களை தேடி ஒவ்வொரு மாவட்டங்களிலும் போராடி வருகின்றோம்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை,மட்டக்களப்பு,அம்பாறை ஆகிய மாவட்டங்களில் நாங்கள் தொடர்ந்தும் கவனயீர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றோம். அதன் தொடர்ச்சியாக ஜெனிவா வரை சென்று நீதி கேட்டும்,குரல் எழுப்பியும் வருகின்றோம். ஆனால் இதுவரை எமக்கு எந்தவித பலனும் கிடைக்கவில்லை. எமது போராட்டத்துக்குரிய பலன்கள் கிடைக்கவும்,எமது குழந்தைகள் காணாமலாக்கப்பட்டதற்கு நீதி கிடைக்கவும் பொதுமக்களாகிய உங்களால் எங்களுக்கு உதவமுடியும்.

ஈழத்தமிழர் வரலாற்றில்இலங்கைஅரசால் காலத்திற்கு காலம் இனப்படுகொலைகள் பல்வேறு கட்டங்களாக அரங்கேறி வந்துள்ளது. உதாரணத்திற்கு 1958, 1977, 1983, மாற்றும் 90தொடக்கம் 2000 ஆண்டு காலப்பகுதிகள்வரை குறிப்பிடலாம். குறிப்பாக 2009 இல் கொத்து கொத்தாக,கூட்டம் கூட்டமாகக்  எமது மக்களை கொன்று குவித்து மிகப்பெரும் இன படுகொலையை சிங்கள இன வெறியாளர்களும் மற்றும் தமிழ் இனத்துரோகிகளும் ஒட்டுக்குழுக்களாக இணைந்து நிகழ்த்தியிருந்தனர் என்பதை நாம் எம் மனங்களில் இருந்து இலகுவில் மறந்து விட முடியாது.இதைவிட இக்காலகட்டங்களில் எம் இனத்தைச் சேர்த்தவர்களாலேயே நாம் அழிக்கப்பட்டோம்.

ஒரு கோடாலிக்காம்பு எப்படி தன் இனத்தை அழிக்கிறதோ அதேபோல் எம் இனத்துக்குள் முளைத்த கோடாலிக்காம்புகள்;தமது சுய இலாபத்துக்காகவும்,தன்னலதிற்காகவும் இப்படுகொலைகளை நிகழ்த்தி வந்திருக்கின்றார்கள். இது நாம் அனைவரும் அறிந்த, அனுபவித்த விடயம். இதற்கு உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டு பின் போராட்டத்தையும், தமிழ் மக்களையும் அழித்த, அழிக்க உதவிய கருணா, பிள்ளையான் ஆகிய ஒட்டுகுழுக்களை கூறலாம். இனவாதிகளுக்கு நிகராக இவர்களும் தம் மக்களை கொன்று குவித்ததில் பெரும் பங்கு வகித்தவர்களாவர்.ஆனால் இப்போது திடீரென எழுந்து வந்து வீரவசனங்களைப்பேசி வாக்குச்சேகரிக்கும் விடையம் என்பது மிகவும் ஆபத்தான நிலைகளையே தமிழ்மக்களுக்கு ஏற்படுத்தும்.

எனவே வருகின்ற 5ம் திகதி (05/08/2020) இலங்கையில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக தான் மக்களில் திடீர் கரிசனையுடன் மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்களாக தம்மை இனங்காட்டப் பலரும் முயற்சிக்கிறார்கள். இதெல்லாம் மக்களை ஏமாற்றி அவர்களின் வாக்கைப் பெறுவதற்கான நாடகம். ஆனால் எமது மக்கள் இலகுவில் இவர்களால் தாம் பட்ட துயரங்களையும், இழப்புகளையும் மறந்துவிட மாட்டார்கள். இவர்களுக்கு தகுந்த பாடம் படிப்பிப்பதற்கு எங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இவர்களுக்கு தேர்தலில் வாக்களிக்காது விடுவதன் மூலம் தமிழ் மக்கள் இவர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும். இவர்களுக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் எமது இனத்திற்கு எதிரான வாக்குகள் என்பதையும் எம் இனஅழிப்பிற்கு கொடுக்கும் அனுமதி எனவும் எம் மக்கள் உணர வேண்டும். இவர்களின் மிக அண்மைக்கால செயல்பாடுகளே இதற்கு உதாரணமாகும்.

காட்டிக்கொடுப்பின் பரிசாக, சிங்கள தேசிய கட்சியின் பிரதித்தலைவராக இருந்தபோதும், மீள் குடியேற்ற பிரதியமைச்சராக இருந்தபோதும் கல்முனை மாநகரப்பிரச்சனையை ஏன் கருணாவால் தீர்க்க முடியாமல்போனது? இப்போது அவருக்கு முண்டு கொடுக்கும் ராஜபக்சேக்களிடம் கேட்டு தேர்தலுக்கு முன்பாக ஏன் கல்முனை பிரதேச சபையை தரம் உயர்த்த கருணாவால் முடியவில்லை? தான் மீள் குடியேற்ற பிரதியமைச்சராய் இருந்தபோது மட்டக்களப்பு மாவட்டத்தில் 750 மலசலகூடங்களை மட்டும் கட்டிக்கொடுத்துவிட்டு எமது மக்களின் பூர்வீக நிலங்களில் ஒன்றான மணலாற்றில் (வெலி ஓயாவில்) திட்டமிட்ட சிங்களக்குடியேற்றத்தை மேற்கொள்வதற்காக குறைந்தளவான சிங்கள மக்களுக்கு ஆயிரம் வீடுகளும், ஆயிரம் மலசலகூடங்களையும் கட்டிக்கொடுத்து சிங்கள மக்களை குடியேற்றியிருகிறார் இந்த கருணா. இப்போது தமிழ் மக்களுக்கான அபிவிருத்தி எனும் மாய நாடகம் போடுகின்றார்.

தமிழ் தேசியத்திற்கு, எமது இன விடுதலைக்கு, எமது வாழ்வுரிமைக்கு, எமது கலாச்சாரத்திற்கு, காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்கு என்று பாசாங்கு வார்த்தைகளை அள்ளி வீசிக்கொண்டு , எமது அடிப்படை நலன்களுக்கு எதிராக செயல்படுபவர்களுக்கும், பேசுபவர்களுக்கும், அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் அவர்களின் இந்த ஈனத்தனமான செயல்களுக்கு நீங்கள் அளிக்கும் அங்கீகாரம் என்றே உலகத்தால் பார்க்கப்படும்.அத்தோடு இச்செயலானது மாவீரர்களின் புதைகுழிகளின்மீது ஏறி மிதிப்பதற்குஒப்பானதுமாகும்.அதே நேரத்தில் நீங்களும் தமிழ் தேசியத்தை எதிப்பவர்களாகவே கணக்கில் எடுத்து ஒட்டுமொத்த தமிழர் நலன்களும்உலகத்தால் உதாசீனம் செய்யப்படும்.

கருணா மற்றும் பிள்ளையான் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்படுமிடத்து, இனவழிப்பு மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்வர்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையால் எடுக்கப்படும் நிலைப்பாடுகளுக்கு ராஜபக்ச அரசாங்கம் இவர்களை கொண்டே மூடுவிழா செய்யும்.அதே நேரத்தில் இனிவரும் காலங்களில் எமது மக்களின் தன் எழுச்சியான போராட்டங்களை தடுக்கும் வகையில் கருணா,பிள்ளையான் குழுக்கள் தங்களது ஆட்கடத்தல்,கொலைகள்,வெள்ளைவான் செயற்பாடுகள் என அரசுடன் இணைந்து தீவிரமாக செயற்படுவர்.

எனவே, இன, மொழிப் பற்றுள்ள வாக்காள பெருமக்களே, கருணா, பிள்ளையான் போன்ற இன துரோகிகளுக்கும், தமிழ் தேசியத்தை, தமிழரின் தனித்துவத்தை அடகு வைப்பவர்களுக்கும் உங்கள் வாக்கைப் போடாதீர்கள். மாறாக தமிழையும் தமிழனையும் உள்ளன்போடு நேசிப்பவர்களையும், கண்ணியமானவர்களையும் எமக்கு நீதி பெற்றுத்தர உளச் சுத்தியுடன் பாடுபடக்கூடியவர்களையும் பாராளுமன்றம் அனுப்புங்கள்.

முன்னர் பாராளுமன்றம் சென்ற தமிழ்தலைமைகளால் தான் எமக்கு அம்பாறை மாவட்டத்தில் எந்தவிதபலனும் கிட்டவில்லை என்று நீங்கள் உணருமிடத்தில் அவர்களை வெளியேற்றி தமிழ் தேசியக்கூட்டமைப்பில் புதிதாக களமிறக்கப்பட்டவர்களை வெற்றி பெறச்செய்வதே சரியான தீர்வாக அமைய முடியும்.எமது கோரிக்கைகளை வலுப் பெறச் செய்யக்கூடியவர்களுக்கு வாக்களிப்பதன் மூலம் உலக நாடுகளில் எமது கோரிக்கைகள் ஏற்றுகொள்ளக் கூடிய சூழ்நிலைகளை உண்டாக்குங்கள்.

உங்கள் புத்திசாதுரியமான நடவடிக்கையே நாம் தேடும் உறவுகளையும், தமிழர்கள் இழந்த உரிமைகளையும் மீட்டெடுக்கும். சிந்தித்து செயற்படுங்கள்.