பிரித்தானியாவில் 13 வது திருத்தச்சட்டம் மற்றும் ஒற்றையாட்சி அரசியலுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்
இலங்கை இந்திய ஒப்பந்தம் என்கின்ற பெயரில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கவும் 13 ம் திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்தவலியுறுத்தியும் தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து இந்திய பிரதமருக்கு அனுப்பிவைக்கப்பட இருக்கும் கடிதத்தை வருகிற 18ம் திகதி இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் கையளிக்க இருக்கிறார்கள் .
குறிப்பாக அந்த கடித்ததில் தமிழ் மக்களை பிராந்திய சிறுபான்மையினர் என்கிற வகையில் வாசகங்கள் குறிப்பிடப்பட்டுள்ள தாகவும், 13ம் திருத்தச் சட்டத்திற்கு அழுத்தத்தை வழங்க கோருவதாகவும் ஒற்றையாட்சிக்குள் பிரிக்கமுடியாத தீர்வை நாம் எதிர்பார்ப்பதாகவும் , தமிழ் அரசியல் வாதிகளும் கையெழுத்திட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச ரீதியில் இதற்கு எதிராக கருத்துக்கள் எழுந்திருக்கும் நிலையில் பிரித்தானியாவில் தமிழர் ஒருங்கிணைப்பு குழு அதற்கான செயற்பாடுகளை கண்டித்து, இலக்கம் 10 டவுனிங் வீதி முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை இன்று காலை 11.30 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பித்தனர். பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.