இங்கிலாந்தில் அகதிகள் குடியேற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை.
இங்கிலாந்து நாட்டின் சவுத்போர்ட் நகரில் உள்ள நடன பள்ளியில் கடந்த திங்கட்கிழமை கத்தி குத்து தாக்குதல் நடைபெற்றது. இந்த கத்தி குத்து தாக்குதலில் 3 சிறுமிகள் உயிரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலை நடத்திய 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
இந்த தாக்குதல் சம்பவம் சவுத்போர்ட் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், தாக்குதல் நடத்தியது இங்கிலாந்தில் அகதியாக குடியேறிய குடும்பத்தை சேர்ந்த சிறுவன் என செய்திகள் பரவின. இதையடுத்து, அகதிகளுக்கு எதிராக உள்ளூர் மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
அதேவேளை, தாக்குதல் நடத்தியது ருவாண்டா நாட்டை சேர்ந்த அகதி தம்பதியின் 17 வயது மகன் அலெக்ஸ் ருடன்குபனா என்றும் அச்சிறுவன் இங்கிலாந்தின் வேல்ஸ் நகரில் பிறந்துள்ளான் எனவும் தெரியவந்துள்ளது. ஆனாலும், தாக்குதலை தொடர்ந்து அகதிகளுக்கு எதிரான போராட்டத்தில் உள்ளூர் மக்கள் குதித்தனர். குறிப்பாக இங்கிலாந்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ள இஸ்லாமிய மதத்தினருக்கு எதிராக உள்ளூர் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். போராட்டம் பல்வேறு இடங்களில் வன்முறையாக மாறியது. மேலும், இஸ்லாமிய மத வழிபாட்டு தலங்களை குறிவைத்தும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
மேலும், அகதிகள் குடியேற்றத்திற்கு எதிரான உள்ளூர் மக்களின் போராட்டம் சவுத்போர்ட், ரூதர்ஹம் உள்பட பல்வேறு நகரங்களிலும் உள்ளூர் மக்கள் போராட்டம் பரவி வருகிறது. போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் 10 போலீசார் காயமடைந்துள்ளனர். மக்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.