சாணக்கியனுக்கு தமிழ் பொது வேட்பாளர் தேவையற்ற விடயமாம்
தற்போதைய சூழ்நிலையில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பெரும்பாலான வேட்பாளர்கள் தமிழ் பொது வேட்பாளர் தேவையற்ற விடயம் என்பதில் ஒருமித்த கருத்துடன் உள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
மட்டு. ஊடக அமையத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்
அனுரகுமார திஸாநாயக்கா, ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாஸ மற்றும் நாமல் ராஜபக்சவும் ஜனாதிபதி தேர்தல் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் தெற்கிலேயுள்ள வாக்குகள் சிதறிச் சின்னா பின்னமாகக் கூடிய நிலை காணப்படுகிறது. அந்த வகையில் தமிழ் மக்களுடைய வாக்குகளுக்குக் கூடிய பெறுமதி காணப்படும்.
இந்நிலையில் இன்னொரு வேட்பாளரை வெல்ல வைப்பதற்காகவே இவ்வாறான தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் அரங்கேற்றப்பட்டது என்பது முற்று முழுதான உண்மை.
இவ்வாறான நிலையில் ரணில் விக்கிரமசிங்க தனக்கெதிராக நாமல் ராஜபக்ச களம் இறங்குவார் என எதிர்பார்க்கவில்லை. அவரின் நினைப்பில் ஜனாதிபதி தேர்தல் வரும்போது மொட்டுக்கட்சி தமக்கு ஆதரவளிக்குமென்ற உணர்வே காணப்பட்டது.
தமிழ்ப் பற்றாளர்கள் ராஜபக்ச தரப்பினருக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பது தெரியும். அதனால்தான் வாக்கைப் பிரிக்கும் செயற்பாடாகத்தான் இருக்கும் என ஆரம்பத்திலிருந்தே கூறுகிறேன் என தெரிவித்தார்.