இணைந்த வடகிழக்கில் பிரச்சாரம்:சி.வி!
இலங்கைத் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக பாக்கியசெல்வம் அரியநேத்திரனை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கியுள்ளதாக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரனுக்கு கணிசமான வாக்குகள் கிடைத்தால் அது தமிழர் பிரச்சினையை மேலும் சர்வதேச மயப்படுத்த உதவும்.அரியநேத்திரன் தொடர்பிலான சுமந்திரனின் எதிர்ப்பு பொருத்தமற்றது. ஒரு காலத்தில் இணைக்கப்பட்ட வடக்கு-கிழக்கு மாகாணத்தில் நாங்கள் திட்டமிட்ட பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்கிறோம்” என்றும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அரியநேந்திரனுக்கு விளக்கம் கோரி இரண்டு வார கால அவகாசம் கொடுத்து தமிழரசுக்கட்சியால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதுவரை கட்சிக் கூட்டங்களிலும் பங்கேற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது எனத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் பொது வேட்பாளராக வர்ணிக்கப்பட்டுள்ள அரியநேத்திரன் சம்மந்தமாக கலந்துரையாடப்பட்டது. சென்ற கூட்ட தீர்மானத்தின் படி விளக்கம் கோரி இரண்டு வார கால அவகாசம் கொடுத்து அவருக்குக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதற்குரிய பதில் கிடைத்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம். அதுவரைக்கும் எமது கட்சியின் எந்தக் கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ளமாட்டார்.
அதேவேளை அரியநேத்திரன் ஆதரவு மேடைகளில் ஏறி ஆதரித்துப் பேசும் போது அவதானமாக இருக்குமாறு கட்சி உறுப்பினர்களைக் கேட்டுக் கொள்கின்றோம். எமது கட்சி இது வரை யாருக்கு ஆதரவு வழங்குவது என எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை” எனவும் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.