பொதுவேட்பாளர்:ஈபிடிபி,சாணக்கியன் எதிர்ப்பு!
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் பங்காளிகளாக இருக்கவேண்டுமே தவிர பொதுவேட்பாளர் என்ற ஏமாற்று சூழ்ச்சியில் சிக்கிவிடக்கூடாது, என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்
யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது கருத்து தெரிவிக்கையில் பொதுக் கட்டமைப்பு என்று கூறிக்கொண்டு ஒப்பந்தம் செய்த கட்சிகளும் சிவில் அமைப்புகளும் இன்று தனித்தனியே ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க அவர்களை சந்தித்து வருகின்றனர்.
ஆனால் பொது வேட்பாளர் குறித்து மக்கள் மத்தியில் எவ்விதமான கரிசனையும் இல்லை. ஏனெனில் பொதுக் கட்டமைப்பு என்றவர்கள் சோரம்போகின்றனர் என்பதும் இன்னுமொரு தென்னிலங்கை தேசியக் கட்சியின் வேட்பாளரது வெற்றிக்கு அவர்கள் வழிவகை அமைத்துக் கொடுப்பதற்கான முகவர்களாகவே இப் பொதுக்கட்டமைப்பு என்ற அமைப்பு இயக்கப்படுகின்றது எனவும் ஈபிடிபி பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே இன்னொரு ஜனாதிபதி வேட்பாளரை வெல்ல வைப்பதற்காகவே தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் அரங்கேற்றப்பட்டுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பெரும்பாலான வேட்பாளர்கள் தமிழ் பொது வேட்பாளர் தேவையற்ற விடயம் என்பதில் ஒருமித்த கருத்துடன் உள்ளனர்.
இந்நிலையில் தெற்கிலேயுள்ள வாக்குகள் சிதறிச் சின்னா பின்னமாகக் கூடிய நிலை உருவாகலாம். அந்த வகையில் தமிழ் மக்களுடைய வாக்குகளுக்குக் கூடிய பெறுமதி காணப்படும்.
அதில் கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களுடைய அதிகூடிய வாக்குகள் இருக்கிறது. தமிழ்ப் பற்றாளர்கள் ராஜபக்ச தரப்பினருக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பது தெரியும்.
அதனால்தான் வாக்கைப் பிரிக்கும் செயற்பாடாகத்தான் இருக்கும் என ஆரம்பத்திலிருந்தே கூறுகிறேன் என இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.