ரணிலின் இருபுறமும் சஜித் மற்றும் அனுர?
நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பியவர்கள் சஜித் பிரேமதாசவோ, அனுர திஸாநாயக்கவோ, ஹர்ஷ டி சில்வாவோ, சுனில் ஹந்துன்நெத்தியோ அல்ல என்று ரணில் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்படும் தொடர் பொதுக்கூட்டத்தின் முதலாவது பேரணி அனுராதபுரத்தில் ஆரம்பமானது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும், அனுர திஸாநாயக்கவும் இன்று மேடைகளில் மக்களின் சுமைகளைப் பற்றி பேசுவது வேடிக்கையானது எனவும், உண்மையில் மக்கள் படும் துன்பம் அவர்களுக்குத் தெரிந்திருந்தால் ஆட்சி அதிகாரத்தைப் பெற்று, மக்களின் பிரச்சினைகளுக்கு அன்றே தீர்வு வழங்கியிருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அன்று கேஸ் சிலிண்டர் 6800 ரூபாவிற்கு சென்ற போது சஜித் பிரேமதாசவும் அநுர திஸாநாயக்கவும் எங்கே இருந்தார்கள் என்று கேள்வி எழுப்பிய ஜனாதிபதி, இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாவிட்டால் இந்த மேடையில் வந்து அமர்ந்துகொள்ளுமாறு அழைப்புவிடுத்தார்.
“கட்சிகளை உடைப்பதற்காக நாம் இன்று ஒன்று கூடவில்லை. கட்சிகள் ஒன்றுகூடி நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வந்துள்ளோம்.
முன்னாள் ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகினர். எதிர்கட்சித் தலைவர் ஓடிவிட்டார். அனுரவைத் தேடவே முடியவில்லை. டொலரின் பெறுமதி 370 ரூபாயாக உயர்ந்தது. கேஸ் சிலிண்டர் ரூ.4900 வரை அதிகரித்தது. பெற்றோல் ஒக்டேன்-92 இன் விலை ரூ.470 வரையில் அதிகரித்தது. ஒடோ டீசல் ரூ.460 வரையில் அதிகரித்தது. மண்ணெண்ணெய் விலை ரூ.460 வரையில் அதிகரித்தது. பஸ் கட்டணமும் மின் கட்டணமும் அதிகரித்தது. மக்கள் கடுமையாகத் துன்பப்பட்டனர். அப்போது சஜித்தும், அனுரவும் எங்கு இருந்தனர்?
மக்கள் கஷ்டம் புரிந்திருந்தால் ஆட்சியை ஏற்றிருக்க வேண்டும். எதிர்கட்சி எந்த வேளையிலும் அரசாங்கத்தைப் பொறுப்பேற்கத் தயாராக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இரண்டாம் எதிர்கட்சி ஏற்க வேண்டும். அவர்கள் எங்கு இருந்தனர்? கேஸ் சிலிண்டர் விலை ரூ.4900 இற்கு கூடியபோது அனுர, சஜித் எங்கு இருந்தனர்? இந்தக் கேள்விகளுக்கு அவர்கள் பதிலளிக்க வேண்டும்.
இன்று அனுராதபுரத்தில் ஆரம்பித்து சஜித், அனுரவிடம் இந்தக் கேள்விகளை எல்லா மேடைகளிலும் கேட்பேன். பதில் இருந்தால் கூறுங்கள், இல்லாவிட்டால் எனது மேடையில் இரு பக்கங்களில் வந்து அமருங்கள்.
அன்று உயர்வடைந்த சிலிண்டர் விலை இன்று குறைந்துள்ளது. அதனால் சிலிண்டர் சின்னத்தை ஏற்றுக்கொண்டேன்.