நெருக்கடி தீர்ந்த பின்னரே தேர்தல்
அரசியல் நிலவரங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக ரணில் விக்ரமசிங்க மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோருக்கு இடையில் வாராந்தம் நடைபெறும் விசேட சந்திப்பு முறிவடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரம் இடம்பெற்ற இவ்வாறான சந்திப்பில் பொதுஜன பெரமுனவின் பலமான உறுப்பினரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது நண்பர்களான துமிந்த திஸாநாயக்க, நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, வஜிர அபேவர்தன உள்ளிட்ட குழுவுடனேயே ரணில் கலந்துகொண்டுள்ளார்.
அது தொடர்பில் பசில் ராஜபக்சவும் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளதுடன், பசில் ராஜபக்சவிற்கும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கும் இடையில் காரசாரமான வார்த்தைப் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இக்கலந்துரையாடலின் போது, எதிர்வரும் தேர்தலில் பரந்துபட்ட கூட்டணியை உருவாக்குமாறும், சிறிலங்கா பொதுஜன பெரமுன அதில் கலந்து கொண்டாலும், ராஜபக்சக்களை இணைத்துக் கொள்ள வேண்டாம் என்றும், ஒன்றிணைய விரும்பும் கட்சிகளால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரசன்ன ரணதுங்க ரணிலிடம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே இலங்கை வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டுவிட்டது என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதன் பின்னரே அதிபர் தேர்தல் குறித்து ரணில் நாட்டு மக்களுக்கு அறிவிப்பார் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
சமகால அரசியல் நிலவரங்கள் குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “எதிர்வரும் வாரம் நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி கிடைக்கப்பெறும். பரிஸ் கிளப் உட்பட சீனாவுடன் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்.
வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டுவிட்டோம் என்ற செய்தியை நாட்டு மக்கள் கொண்டாட முடியும். இலங்கை வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு விட்டது என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதன் பின்னரே தேர்தல் குறித்து ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு அறிவிப்பார் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்..