கார்த்திகை மலர் பொறிக்கப்பட்ட பாதணிகளை மீளப்பெற அதிகாரத்தை பயன்படுத்துவார்களா?
கார்த்திகை மலர் மிதிபடும் ஒன்றாக்கியதன் மூலம் தமிழர்களின் அரசியலை மிதித்தழிப்போம் என பகிரங்கமாகவே கர்ஜிப்பதாகவே உள்ளது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
அவரால் இன்று வியாழக்கிழமை (30) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையின் பிரபல பாதணி உற்பத்தி நிறுவனமான டி.எஸ். ஐ கம்பெனி அண்மையில் சந்தைப்படுத்தியுள்ள தனது உற்பத்தி ஒன்றில் கார்த்திகை மலரை பதிவிட்டுள்ளது. இது இலங்கையின் பேரினவாத அரசியல் முதலாளித்துவத்தினையும் எந்த அளவிற்கு ஆக்கிரமித்துள்ளது என்பதை காட்டுவதோடு தமிழர்களின் அரசியல் அடையாளங்களில் ஒன்றான கார்த்திகை மலரை மிதிபடும், மிதிக்கப்படும் ஒன்றாக்கியதன் மூலம் தமிழர்களின் அரசியலை மிதித்தழிப்போம் என பகிரங்கமாகவே கர்ஜிப்பதாக உள்ளது. இதனை வன்மையாக கண்டிப்பதோடு தமிழ் உணர்வு மிக்க தேசப்பற்றார்கள் இதற்கு தகுந்த பாடத்தை வெளிப்படுத்த வேண்டும்.
யாழ் தெல்லிப்பளையில் பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டி ஒன்றில் இம் மலர் அலங்காரத்துக்கு பாவிக்கப்பட்ட போது அப்பாடசாலையில் அதிபர் உட்பட ஆசிரியர்களை பொலிசார் விசாரணைக்கு உட்படுத்தினர். இதே போன்று மேற்படி குறித்த பாதணி கம்பனியின் திட்டமிடல் வடிவமைப்பு சந்தைபடுத்துனர்கள் விற்பனை முகவர்கள் என பலதரப்பினரையும் பொலிசார் விசாரணைக்கு உட்படுத்துவார்களா? சந்தையில் விற்பனைக்கு விடப்பட்டுள்ள பாதணிகளை மீளப்பெற அதிகாரத்தை பயன்படுத்துவார்களா? என பொலிஸ் மா அதிரை கேட்கிறோம்.
கடந்த ஒரு கிழமைக்கு முன்னர் கிழக்கில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிரப்பட்ட போது சுகாதாரத்தை காரணம் காட்டி அதனை தடுத்து நிறுத்தி அடவாடித்தனம் புரிந்த பொலிசார் அதற்கடுத்து கடந்த கிழமை விசாக பண்டிகை காலத்தில் அதே சுகாதாரத்தை காரணம் காட்டி எந்த ஒரு உணவு பகிர்களையும் தடுத்து நிறுத்தியதாக அடவாடித்தனம் புரிந்ததாக செய்திகள் வரவில்லை. இது தமிழர்களுக்கு ஒரு நீதி சிங்கள பௌத்தர்களுக்கு ஒரு நீதி எனும் பௌத்த பேரனவாதத்தின் அரசியலை வெளிப்படுத்தியது.
ஒரு உற்பத்தி நிறுவனம் தன்னுடைய நீண்ட கால கள ஆய்வில் மக்களின் மனநிலையை அறிந்த பின்னரே உற்பத்தியினை வடிவமைக்கும். சந்தையில் விற்பனைக்கு விடும். அவ்வாறெனில் டி. எஸ்.ஐ கம்பெனி நீண்ட கால திட்டமிடலின் அடிப்படையில் காலனியில் கார்த்திகை மலரை அடையாளப்படுத்தி உற்பத்தி செய்து சந்தைப்படுதைக்கு விட்டுள்ளது எனில் இலாபத்திற்கு அப்பால் அதன் அரசியல் நோக்கம் தெளிவானது. தமிழர்களை அடக்கி ஒடுக்கி அரசியல் ரீதியாக துவம்சம் செய்வோம் எனும் பேரினவாத மனநிலையை மக்கள் மயப்படுத்தி தமது அரசியல் கூலித்தன்மையை வெளிப்படுத்தி உள்ளது எனலாம்.
அரச திணைக்களங்கள், சிங்கள பௌத்த பிக்குகள் தமது பேரினவாத செயற்பாட்டுக்குள் இழுத்து தமிழர்களின் நிலைகளை பறித்து ஆக்கிரமிக்கும் ஆட்சியாளர்கள் தனியார் உற்பத்தி நிறுவனங்கள் வேலைத் தளங்கள் என்பவற்றையும் தமது அரசியலுக்கு பாவிக்க தொடங்கிவிட்டனர் என்பதையே டி. எஸ். ஐ கம்பெனி வெளிப்படுத்தி உள்ளது.
பேரினவாதம் பலம் வாய்ந்த ஒன்றாக கட்டமைக்கப்பட்டு பல்வேறு முகங்களில் கிளைகளை பரப்பி சிங்கள பௌத்த அரச மரம் போல் வியாபித்திருக்கின்றது என்பதை நாம் உணர வேண்டும். இதற்கு தமிழர் தேசிய கொள்கை உருவாக்கிகள், பரப்புரையாளர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், சிவில் சமூகத்தினர் எவ்வாறு பதில் அளிக்க போகின்றனர்?
தமிழ்த் தேசிய சிந்தனையாளர்கள் ஒன்றிணைய வேண்டும்,மக்கள் திரட்சி கொள்ள வேண்டும், அடுத்த தேர்தலுக்கு மக்களை ஆயத்தப்படுத்த வேண்டும் என்று கூறுவார்கள் உடனடியாக பாதணி விடயத்தில் தலையிட்டு அரசுக்கும் கம்பெனிக்கும் தமது எதிர்ப்பினை வடகிழக்கு தழுவிய ரீதியில் வெளிக் காட்டுதல் வேண்டும்.
எமது எதிர்ப்பு பாதணிக்கும், பாதணி கம்பெனிக்கும் எதிரானது மட்டுமல்ல. அது அதற்குப் பின்னால் இருக்கும் அரசியலுக்கும் அதன் சக்திகளுக்கும் எதிரானதுமாகும். பல இலட்சம் உயிர்கள் எமது அரசியலுக்காக கொல்லப்பட்ட பின்னரும் எமது அரசியலை கைவிடாத தேசமாக ஒன்று திரண்டு எதிர்ப்பு காட்ட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.இச் சந்தர்ப்பத்தில் அமைதி காப்போம் எனில் எமது அரசியலுக்கு நாமே எதிரிகளாவோம்.