மக்கள் எதிர்ப்பினால் கைவிடப்பட்ட சுழிபுரம் திருவடிநிலை காணி அளவீட்டுப் பணி

யாழ். சுழிபுரம் திருவடிநிலை காட்டுப்புலத்தில் கடற்படை முகாமிற்காக காணி சுவீகரிப்பு இடம்பெறவிருந்த நிலையில், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள், காணி உரிமையாளரின் எதிர்ப்பினையடுத்து அந்த காணி சுவீகரிப்பு செயற்பாடு கைவிடப்பட்டது.
கடற்படையினரின் காணி சுவீகரிப்புக்காக சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியில் உள்ள 4 பரப்பு தனியார் காணியினை அளப்பதற்காக திணைக்களத்தினர் காட்டுப்புலத்துக்கு வருகை தந்தபோது தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இந்நிலையில் தாம் திரும்பிச் செல்வது தொடர்பில் மேலதிகாரிக்கு அறிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
இதனையடுத்து இலங்கை தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மேலதிகாரியுடன் தொடர்புகொண்டு பொதுமக்களின் எதிர்ப்பு பற்றி தெரிவித்தார். இந்நிலையில் திணைக்களத்தினர் காணியை விட்டு திரும்பிச் செல்ல மேலதிகாரியினால் உத்தரவிடப்பட்டது.
தொடர்ந்து சட்டத்தரணி சுகாசினால் உரிமையாளர்களின் எதிர்ப்பு கடிதமும் பாரப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவ்விடத்தை விட்டு நில அளவை திணைக்களத்தினர் அகன்று சென்றனர்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரன், ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், பொதுமக்கள் என பலரும் களத்தில் இருந்தனர்.

