September 28, 2024

தமிழ்த் தேசிய அரசியலுக்கான தலைமைத்துவத்தில் தமிழரசுக் கட்சி தோல்வி அடைந்து விட்டது!வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ்

யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழ்த் தேசிய அரசியலை சிறந்த தலைமைத்துவத்தின் கிழ் கொண்டு செல்லக் கிடைத்த பல சந்தர்ப்பங்களை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியும் அதன் தலைமையும் பலவீனப்படுத்தி தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை சிதைத்து பல ஆயிரக்கணக்கான பொது மக்களின் தியாகத்தால் கட்டி வளர்க்கப்பட்ட கட்சியையும் மக்களின் வெறுப்பு நிலைக்கு தள்ளி விட்டுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் யுத்தம் முடிந்த பின்னர் விடுதலைப் புலிகளின் பலத்தினால் பெறப்பட்ட 22 பாராளுமன்ற உறுப்பினர் பலத்தை 15 ஆண்டுகளில் 10 தாக பலவீனப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளுடன் மேற் கொள்ளப்பட்ட சர்வதேச பேச்சுவார்த்தையை யுத்த மௌனிப்பின் பின்னர் தங்களுடன் தொடருமாறு தமிழ் மக்களின் ஐனநாயக பலம் கொண்ட 22 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தலைமை தாங்கிய திரு. சம்பந்தன் உடனடியாக சமாதான தூதர் சொல்ஹேமுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் கோரிக்கை வைக்காமை தவறு. அவ்வாறு கோரிக்கை வைத்திருந்தால் சகல தரப்பினதும் உண்மை முகங்கள் வெளிவந்திருக்கும் அத்துடன் எரிக் சொல்ஹேம் இன்று இல்லாத தரப்பான புலிகள் மீது முழுக் குற்றச் சாட்டையும் வைத்திருக்க முடியாது.

ஒஸ்லோ மேசையில் உரையாடிய விடையங்களை விட்டுக் கொடுக்க முடியாது என 15 ஆண்டுகளின் பின்னர் கனவு கண்ட சம்பந்தன் மொட்டம் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல ஐனாதிபதி தமிழ்ப் பொது வேட்பாளர் விடையத்தில் ஒஸ்லோ விடையத்தை கையில் எடுத்துள்ளார்.

சம்பந்தன் உள்ளிட்ட தமிழ் அரசுக் கட்சி இதய சுத்தியுடன் ஒஸ்லோ பிரகடனத்தை கையில் எடுத்திருந்தால் யுத்தம் முடிந்து சூடு ஆற முதல் சரத் பொன்சேகாவுக்கு வாக்குப் போடுமாறு தமிழ் மக்களைப் பார்த்து கோரி இருக்க முடியாது.

நல்லாட்சி அரசில் புதிய அரசியல் அமைப்புக்கான இடைக்கால வரைபு வந்தபோது சம்பந்தனின் உண்மை முகம் அம்பலமாகியது. மிகப் பெரும் அடிமை முன்மொழிவை இடைக்கால வரைபிற்கு வழங்கி இருந்தார் அந்த வரைபில் ஒஸ்லோ பிரகடனத்தின் ஒரு துளி கூட இடம் பெற வில்லை.

நல்லாட்சி அரசாங்கத்தில் அதன் நூறு நாள் வேலைத் திட்டத்தில் ஒன்பது மாகாணங்களுக்குமான காணி மற்றும் பொலிஸ், நிதி அதிகாரங்களை இலகுவாக பெற்றிருக்க முடியும் அதன மூலம் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் சகல இருப்புக்களும் மத்திய அரசாங்கம் கபளீகரம் செய்வதை சட்டரீதியாக தடுத்திருக்க முடியும் இந்த விடையத்தை ஏனைய அங்கத்துவ கட்சிகள் கூறும் போது அதனை புறம் தள்ளிவிட்டு இன்று ஐனாதிபதியாக வருவாரா? அல்லது வரமாட்டாரா? என கூறும் சஐித் கதைவிடும் காணி பொலிஸ் அதிகாரத்தை பெரிய விடையமாக கூறுகின்றனர்.

சஐித் பிறேமதாஸ அவர்கள் மாகாணங்களுக்கு காணி பொலிஸ் அதிகாரங்கள் கிடைக்க உண்மையாக விரும்பினால் தற்போது கூட ஒரு தீர்மானத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியும். ஏன் செய்யவில்லை?

தமிழினப் படுகொலை விவகாரம் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைப் பேரவையின் தீர்மானங்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் போன்றவற்றில் உறுதியான நிலைப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்த தவறியுள்ளனர் இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒன்றிணைத்து கூட்டமைப்பாக இருந்த காலங்களில் ஒன்று கூட்டி ஏகமனதான தீர்மானங்களை தமிழ் அரசுக் கட்சி எடுக்கவில்லை மாறாக சம்பந்தன் தன்னிச்சையாக பல தடவைகளில் தீர்மானங்களை வெளிச் சக்திகளின் தேவைக்கு ஏற்ப எடுத்தமையால் பல பின்னடைவுகள் தமிழ் இனத்திற்கே ஏற்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிளவுக்கும் தேசிய அரசியலின் பலவீனமான நிலைக்கும் தமிழ் அரசுக் கட்சியின் தன்னிச்சையான முடிவுகள் காரணமாகியதுடன் தமிழ்த் தேசிய அரசியலுக்கான தலைமைத்துவத்தையும் இழந்துள்ளது

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert