Mai 20, 2024

வடக்கு கிழக்கில் ஏன் பொதுமுடக்கம் ?

பொது முடக்கத்திற்கு, தமிழ் பேசும் மக்களின் ஆதரவையும், ஒத்துழைப்பையும் நாம் உரிமையுடன் வேண்டுகின்றோம் என எட்டு கட்சிகள் கூட்டாக கோரியுள்ளன.

யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அறிக்கையை வெளியிட்டனர்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கைத் தீவு சுதந்திரம் அடைந்து, 75 வருடங்கள் கடந்து விட்ட போதிலும், தமிழ் பேசும் மக்களாகிய நாம், உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து நீதி கோரி நிற்கின்றோம்.
போர் முடிந்து 14 வருடங்கள் உருண்டோடி விட்டன. இருந்தும், இதுவரையில் எமக்கு நீதி வழங்கப்படவில்லை. மாறாக, எமது துன்பங்களும் துயரங்களும் நீடித்து நிற்கின்றன.

எம் மீதான அழுத்தங்களும் நெருக்குதல்களும் தொடர்கின்றன. எமது தாயகமான வட-கிழக்கு மாகாணங்களில் எமது பெரும்பான்மைப் பலத்தை சிதைத்து. இருப்பை பலவீனப்படுத்தி. உரிமை கோரி நாம் எழுந்து நிற்க முடியாத நிலைமையை காலப்போக்கில் ஏற்படுத்தும் இலக்குடன், அரசாங்க மட்டத்திலும் – அதன் ஆதரவோடும் பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எமது தாயகத்தில், வரலாற்று ரீதியாக எமது வழிபாட்டு தலங்கள் அமைந்திருந்த பல்வேறு இடங்களில் பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக நீதிமன்றங்கள் வழங்கிய கட்டளைகள் மீறப்பட்டுள்ளன. முல்லைத்தீவில் குருந்தூர்மலை. திருகோணமலையில் கன்னியா மற்றும் விளையாட்டரங்க சுற்றாடல். யாழ்ப்பாணத்தில் தையிட்டி ஆகிய இடங்களில் புத்தர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. குருந்தூர்மலையிலும். தையிட்டியிலும் பௌத்த விகாரைகள் கட்டப்பட்டுள்ளன. திருகோணமலையில் இலுப்பைக்குளத்தில், விகாரை ஒன்றுக்கான முன் நடவடிக்கைகள், ஆளுநரின் கட்டளையையும் மீறி. மேற்கொள்ளப்பட்டுள்ளன. தொல்பொருள் திணைக்களம், வனத் திணைக்களம். வன ஜீவராசிகள் திணைக்களம் என்பன எமது பெருந்தொகையான காணிகளை ஆக்கிரமித்து அபகரித்துள்ளன.

காணிகள் மீளக் கையளிக்கப்படும் என்று அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

இதேவேளையில், மட்டக்களப்பு மாவட்டத்தில். மயிலத்தமடு – மாதவனை பிரதேசத்தில் தமிழ்ப் பண்ணையாளர்களின் பல்லாயிரக்கணக்கான கால் நடைகளின் மேய்ச்சல் தரவையாக மிக நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வந்த பாரிய பிரதேசத்தை, சிங்களக் குடியேற்ற வாசிகள் ஆக்கிரமித்து பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்ப் பண்ணையாளர்களின் கால் நடைகள் ஆக்கிரமிப்பாளர்களால் பெருந்தொகையில் பிடிக்கப்பட்டும். சுடப்பட்டும். கொல்லப்பட்டும் உள்ளன. இதனால் பண்ணையாளர்களின் வாழ்வே இருண்டு போய் உள்ளது. பயிர் அறுவடை முடிந்தவுடன் குடியேற்ற வாசிகள் வெளியேறி விடுவார்கள் என்று அரசாங்கத் தரப்பில் கடந்த வருடம் கொடுக்கப்பட்ட வாக்குறுதி காற்றோடு கலந்து போய் பல மாதங்கள் ஆகிவிட்டது.

ஆக்கிரமிப்பு தொடர்கின்றது. மறுபுறத்தில், குருந்தூர்மலை ஆலய வழக்கில் எமது மக்களின் வழிபாட்டு உரிமையை ஏற்றுக் கொண்டு தீர்ப்பளித்த முல்லைத்தீவு நீதிபதி, அச்சுறுத்தல்கள் மற்றும் கொலை மிரட்டல்களின் விளைவாக நாட்டை விட்டே தப்பிச் சென்றுள்ளார்.

யுத்த காலத்தில் நிகழ்த்தப்பட்ட பல நூற்றுக்கணக்கான படுகொலைகளில், சர்வதேசத்தை திருப்திப்படுத்த, சிலவற்றுக்கு வழக்குகள் தொடுக்கப்பட்டதனை நீங்கள் அறிவீர்கள்.

 மூதூர் – குமாரபுரம் படுகொலைகள் தொடர்பான வழக்கு அநுராதபுரத்திற்கு மாற்றப்பட்டு, சிங்கள யூரி சபையினர் முன்பு விசாரணை செய்யப்பட்டதன் முடிவில், எதிரிகளான இராணுவத்தினர் அனைவரும் விடுதலை செய்யப்பட்டதை யார்தான் மறக்க முடியும்? அதைப்போலவே, மிருசுவில் படுகொலைகள் பற்றிய வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த இராணுவ அதிகாரிக்கு, கோட்டபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வந்த பின், பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அவர் விடுதலை செய்யப்பட்டதை எவரும் மறந்துவிட முடியாது.

 
மேலும், யுத்தம் மீண்டும் வெடித்த போது, 5 தமிழ் மாணவர்கள் திருகோணமலை கடற்கரையில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலும் நீதி மறுக்கப்பட்டது. கொழும்பில் வைத்து கடத்தப்பட்ட 11 தமிழ் இளைஞர்கள் திருகோணமலைக்கு கொண்டு வரப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவங்களிலும் உண்மை புதைக்கப்பட்டு விட்டது.

இவை எல்லாம் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான குற்றங்களைச் செய்வோர் தண்டிக்கப்படாமல், தப்பிவிடுவார்கள் என்பதற்கு உறுத்தும் உதாரணங்கள் ஆகும்.

இப்பொழுது, நீதிக்காக துணிந்து நின்ற முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு நேர்ந்திருக்கும் கதி தொடர்பிலும் உண்மை மழுப்பப்பட்டு, மறைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது!

இந்தச் சூழ்நிலையில், இந்த நாட்டில் தமிழ் பேசும் மக்கள் தொடர்ச்சியாக அனுபவித்து வரும் அநீதிகளையும், நீதி மறுக்கப்படுவதையும் உலகத்தின் கவனத்திற்கு மீண்டும் கொண்டு வரும் நோக்கத்துடனும், எமது மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு அவற்றில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவதை கண்டித்தும், மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரவையை ஆக்கிரமித்து இருப்போரை வெளியேற்றக் கோரியும், எமது தாயகமான வட- கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் எனப்படும் ஒரு பொது முடக்கத்திற்கு தமிழ்த் தேசியக் கட்சிகளாகிய நாம் ஒன்றிணைந்து அழைப்பு விடுக்கின்றோம்.

கிழக்கை தளமாகக் கொண்டு இயங்கும் முஸ்லிம் அரசியல் கட்சிகளும் இதற்கு வட- ஆதரவு தர முன்வந்துள்ளன. இந்நிலையில், நாளை மறுதினம்வெள்ளிக்கிழமை நிகழவுள்ள இந்த பொது முடக்கத்திற்கு, வட- கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் பேசும் மக்களின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் நாம் உரிமையுடன் வேண்டுகின்றோம்.

மேலும், எம் மக்கள் மத்தியில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் மனித உரிமை இயக்கங்கள், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள் உட்பட மாணவர் அமைப்புக்கள், மகளிர் உரிமை நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள், வணிகர் கழகங்கள், சிவில் சமூக சங்கங்கள் மற்றும் மத ஸ்தாபனங்கள் உட்பட, பல்துறை சார்ந்த செயற்பாட்டு அமைப்புக்களின் ஆதரவையும் பங்களிப்பையும் இந்த மக்கள் போராட்டத்தில் நாம் நாடி நிற்கின்றோம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனஇலங்கைத் தமிழரசுக் கட்சி தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ), தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), தமிழ் மக்கள் கூட்டணி , ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி,  தமிழ்த் தேசியக் கட்சி ஜனநாயகப் போராளிகள் கட்சி , ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் ஆகியன இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளது. 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert