April 26, 2024

டிசெம்பர் 10:ஏதுமில்லை!

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று மட்டக்களப்பு – கல்லடி பாலத்திற்கு அருகிலிருந்து ஆரம்பமான வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களது உறவுகளின் பேரணி மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் நிறைவு பெற்றது.

இதில், கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களது உறவுகள் கலந்து கொண்டனர்.

இப்பேரணியில் கலந்து கொண்டவர்கள் இதன்போது அரசுக்கு எதிராக பல்வேறு கோசங்களை எழுப்பியதுடன், பதாதைகளையும் ஏந்தியிருந்தனர். பேரணியின் இறுதியில் மட்டக்களப்பு மணிக்கூட்டுக் கோபுரம் அருகில் கோசங்களை எழுப்பி ஒன்று கூடியதுடன், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு – திருகோணமலை இணைப்பாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 

“10.12.2022 மனித உரிமைககள் மறுக்கப்பட்ட மண்ணில் மீண்டும் ஒரு மனித உரிமைகள் தினத்தை கடந்து செல்கின்றோம்.  இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம். இத்தினத்தை மனித உரிமைகளை மதிக்கும் நாடுகளும், தனது மக்கள் அந்த மனித உரிமைகளை அனுபவிக்கும் படியாக நடந்துகொள்ளும் நாடுகளும் அனுஷ்டிப்பதே பொருத்தமானதாகும்.

வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாம், சிறிலங்கா ஆயுத படையினரால் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் அரசினதும், அரசு படைகளினதும் பொய் வாக்குறுதிகளை நம்பி இறுதி யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் சரணடைந்த, கையளிக்கப்பட்ட, எமது உறவுகளைத் தேடிப் போராடி வருகின்றோம்.

ஆயின் எமது நீதிக்காக போராடும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. போராட ஆயத்தமாகும் போது, சிங்கள அரச புலனாய்வு படைகளால் அச்சுறுத்தப்படுகின்றோம். போராடும் போது காவல்துறையினர் ஒன்றுக்கு மேற்பட்ட வேலிகளாக எம்மை சூழ்ந்து எமது போராட்டத்தை நசுக்கின்றன.

எமது வயோதிப தாய்மாரையும், பெண்களையும் சப்பாத்து காலால் மிதித்தும், பொல்லால் தாக்கியும், பெண்களில் உடைகளைக் கிழித்தும் காட்டுமிராண்டித்தனமாக எம்மை நடத்துகின்றனர்

இப்படியான மனித உரிமை மீறல்களுக்கு உள்ளாகும் நாம் இன்றைய தினத்தில் இதை வெளிக்கொணரும் முகமாக, ஒரு கவனயீர்ப்பு போராட்டத்தை செய்கிறோம்.

இதன் மூலம் பாதிக்கப்பட்ட தமிழ் தாய்மார்கள் ஆகிய நாம் அனுபவித்த, அனுபவித்துக் கொண்டிருக்கும் மனித உரிமைகளுக்கு எதிரான அடக்கு முறைகளையும், கண்ணியமற்ற வன்முறைகளையும், நீதி மறுக்கப்பட்டு அநீதியாக நடத்தப்படுவதையும் சர்வதேசத்திற்கும் தெற்கில் வாழும் சிறிலங்கா மக்களுக்கும் மீண்டும் ஒருமுறை தெரியப்படுத்துகின்றோம்

அதன் மூலம் அனைவரது மனசாட்சியையும் தட்ட மீண்டும் முயற்சிக்கின்றோம். இந்த ஆண்டு சர்வதேச மனித உரிமைகள் தினத்திற்கான கருப்பொருளாக „அனைவருக்கும் கண்ணியம், சுதந்திரம், நீதி“ என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையில் உள்ள பல அரசசார்பற்ற அமைப்புகள் குறிப்பாக தமிழ் மக்களுக்கு சேவை செய்வதாக காட்டிக்கொள்ளும் அமைப்புகள் இந்த நாளை வருடந்தோறும் அனுஷ்டிக்கிறார்கள். இம்முறையும் அனுஷ்டிப்பார்கள்.

அவர்களை நோக்கி கேட்கிறோம் நீங்கள் சேவை புரிவதாக கூறும் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களாகிய நமக்கு மேற்கூறிய கண்ணியம் சுதந்திரம் நீதி என்பன மறுக்கப்பட்டு எம்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட பல சந்தர்ப்பங்கள் உண்டு, உதாரணத்துக்கு 20-03-2022 மட்டுவில் சம்பவம் அவற்றுள் ஒன்று, அதில் இரு தாய்மார்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் அளவு தாக்கப்பட்டனர்.

அந்த நேரத்தில் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? குறைந்தது ஒரு கண்டன அறிக்கையை வெளியிடும் அளவு மனசாட்சி இருந்ததா உங்களுக்கு? எத்தனை பெண்கள் அமைப்புகள் உள்ளன தமிழ் பிரதேசங்களில் எமக்காக ஒரு கண்டன பேரணி நடத்த முயலாதது ஏன்? என்பதே எமது கேள்வியாகும்.

இதே கேள்வியை சர்வதேசத்திடமும் முன்வைக்கின்றோம். நாம் இறுதி நம்பிக்கையாக சர்வதேச நீதியை நோக்கி போராடிக் கொண்டிருக்கின்றோம். தெற்கில் போராட்டங்களின் போது தாக்குதல் நடத்தப்பட்டால் உடனடியாகவே கண்டனம் தெரிவிக்கும் நீங்கள் நாம் தாக்கப்படும் போது மௌனம் காப்பது என்?

இறுதி யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து எமது அன்புக்குரியவர்களுக்கான நீதியைக் கேட்டுப் போராடிய நாங்கள் நீதி கிடைக்காததால் 20-02-2017 ல் இருந்து 2120 நாட்களாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம்.

எம்முடன் போராடிய உறவுகள் 150 பேர் அளவில் இறந்துவிட்டார்கள். மிகுதியாக உள்ளவர்களும் மனக்கவலை, மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு நோயாளிகளாகவே உள்ளோம்.

மருந்துகளுக்கு இலங்கையில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடும் விலையேற்றமும் காரணமாக உடல் நலம் குன்றிய நிலையிலேயே நாம் எமது அன்புக்குரியவர்களை தடுகின்றோம். ஏற்கனவே ஏழ்மையிலுளள எம்மை இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி ஒரு நேர உணவுக்குக் கூட கஷ்டப்படும் நிலைக்கு தள்ளியுள்ளது.

இப்படி பசி பட்டினியுடனும் நோயுடனும் போராடியபடியே நீதிக்காக போராடிக்கொண்டிருக்கின்றோம். எமது மக்களின் இந்த இக்கட்டான நிலையை சிறிலங்கா அரசாங்கம் தனக்கு சாதமாகப் பயன்படுத்தி 2 இலட்சம் ரூபா நட்ட ஈட்டை திணித்து எம் உறவுகளுக்கு சான்றிதழ் திட்டத்தை வேகமாக நடைமுறைப்படுத்துகிறது.

மேலும் நன்கு திட்டமிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை இறந்தவர்களாக்கி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை படிப்படியாகக் குறைத்து விடயத்தையே மூடிவிட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

நிதியை கொடுத்து நீதியை நசுக்க சிறிலங்கா அரசு முயற்சி செய்கின்றது. இதனை சர்வதேச சமூகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது? ஐ.நா ஆணையாளர் அவர்களே, சிறிலங்கா அரசாங்கம் தமிழர்களை இனப் படுகொலை செய்தும் வலிந்து காணாமல் ஆக்கியும் பாரபட்மாகவே நடத்தி வந்திருக்கின்றது.

எங்களுக்கான நீதி கூட சிறிலங்கா அரசிடமிருந்து கிடைக்காது. ஏனெனில் இங்கு சிங்களவர்களுக்கு ஒரு நீதி தமிழர்களுக்கு ஒரு நீதி. எமக்கான நீதியை சர்வதேசமும் ஐ.நாவுமே வழங்க வேண்டும்.

காலம் கடந்த நீதி, சிறிலங்கா அரசு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட விவகாரத்தை முடிப்பதற்கு முன் எங்கள் உறவுகளை தேடி எங்களிடம் ஒப்படைக்க சர்வதேசமும், ஐ.நாவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மிகவும் மன்றாட்டமாக கேட்டு நிற்கின்றோம்” என அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert