சிங்கள படைகள் வெளியேறவேண்டியது நியாயமானது!
ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண வருகையின் போது பெண்கள், சிறுவர்கள், மதத்தலைவர்கள் மற்றும் மாணவர்கள் மீதான ஆயுத படையினரின் வன்முறை தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக மதத்தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
யாழ்ப்பாணத்தில், தேசிய பொங்கல் எனும் பெயரில் இலங்கை ஜனாதிபதி ரணில் அவர்களினால்; பொங்கல் தினத்தில் (15.01.2023) சர்வதேசத்திற்கும், சிங்கள மக்களுக்கும் அரங்கேற்றப்பட்ட நாடகத்தை தோலுரித்துக்காட்டும் விதமாக யாழ் பல்கலைகழக மாணவர்களால் அமைதிவழி பேரணி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் போராட்டத்தில் கலந்துகொண்ட வயோதிபத்தாய்மார்கள், சிறுவர்கள், பெண்கள், மதத்தலைவர்கள் மற்றும் மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறை பிரயோகம் மற்றும் நீர்த்தாரைப்பிரயோகத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
தமிழர் தாயகப் பகுதியில் தமிழ் மக்கள் ஆகிய நாம் சுதந்திரமாக நடமாட முடியாமலும், எமது அரசியல் நிலைப்பாட்டினை சுதந்திரமாக வெளிப்படுத்த முடியாமலும் தொடர்ச்சியான அடக்குமுறைக்குள்ளேயே கடந்த பதின்மூன்று வருடங்களாக வாழ்ந்து வருகின்றோம். எமது உறவுகளைக் கொன்று குவித்த, காணாமல் ஆக்கிய, எமது நிலங்களை ஆக்கிரமித்து நிற்கும் ஆயுத படையினரும், புலனாய்வாளர்களும் தொடர்ச்சியாக எமது மக்களை அச்சுறுத்தியும், அவர்களின் ஜனநாயக உரிமைகளை மறுதலித்தும் ஒடுக்கு முறைகளை பிரயோகித்தே வருகின்றனர். ஆனால் தைப்பொங்கல் தினத்தன்று பொதுமக்கள் மீது நேரடியாகவே தாக்குதலினை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவமானது எமது நீண்டகால கோரிக்கைகளான, ஆயுத படையினரை தமிழர் தாயகத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும்.
தமிழ்த் தேசிய இனப்பிரச்சனைக்கான எந்தவொரு நிரந்தர அரசியல் தீர்வுக்கும், சர்வதேசத்தினால் நடாத்தப்பட்டு கண்காணிக்கப்படும் பொதுவாக்கெடுப்பின் மூலம் தமிழ் மக்களின் ஆணையைப் பெற வேண்டும். இதில் சர்வதேசத்தினால் அங்கீகரிக்கப்பட்ட இனப்பிரச்சனைக்கான தீர்வுகள் தெரிவுகளாக உள்ளடக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கைகளினை மீண்டும் வலுப்படுத்தியுள்ளதென சர்வ மதத்தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் கூட்டாக விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளன.
அறிக்கையில் சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் நல்லை ஆதீனம் – யாழ்ப்பாணம்
அதி.வண. நோயல் இம்மானுவேல், ஆயர் – திருகோணமலை மறைமாவட்டம்
தவத்திரு அகத்தியர் அடிகளார், தென்கயிலை ஆதீனம் – திருகோணமலை
வண. பிதா. பத்திநாதன் ஜெபரட்ணம், குருமுதல்வர் – யாழ் மறைமாவட்டம்
தவத்திரு வேலன் சுவாமிகள், சிவகுரு ஆதீனம் – யாழ்ப்பாணம்
வண. பிதா. ஜோசப் மேரி – மட்டக்களப்பு
வண. பிதா. கந்தையா ஜெகதாஸ் – மட்டக்களப்பு
வண. பிதா. ரொபேர்ட் சசிகரன் – யாழ்ப்பாணம்
வண. பிதா. செபமாலை பிரின்சன் – – மட்டக்களப்பு
திருமதி யோ. கனகரஞ்சினி, தலைவர் – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் – வடக்கு கிழக்கு மாகாணங்கள்
திரு.ம.கோமகன், அமைப்பாளர் – குரலற்றவர்களின் குரல்
திரு.அ.விஜயகுமார், தலைவர் – யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
திரு.நி.தர்சன், தலைவர் – கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் – கலை, கலாசார பீடம் ஆகியோர் ஒப்பமிட்;டுள்ளனர்.