சம்பந்தன், சுமந்திரனுடனான நேற்றைய பேச்சு உத்தியோகபூர்வமற்றதாம்!
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் ஆகியோருடனான சந்திப்பு உத்தியோக பூர்வமற்றது என ஜனாதிபதி செயலகத்தினால் , அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சே, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா , தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் , நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் , கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் மற்றும் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் ஆகியோர் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
குறித்த சந்திப்பினை ஒத்தி வைக்குமாறு யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் கடிதம் ஊடாக ஜனாதிபதியிடம் கோரி இருந்தார்.
குறித்த கடிதத்திற்கு பதில் அளிக்கும் முகமாக சி.வி விக்னேஸ்வரனுக்கு ஜனாதிபதி செயலகத்தில் இருந்து அனுப்பப்பட்ட கடிதத்தில் , இந்த சந்திப்பு உத்தியோகபூர்வமற்றது. எதிர்காலத்தில் , அடுத்த சந்திப்புகள் ஒழுங்கு செய்யப்படும் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை , நேற்றைய தினம் நடைபெற்ற ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு , தமிழ் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.வி. விக்னேஸ்வரன் , செல்வம் அடைக்கலநாதன் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரை அழைக்காது , நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் சந்திப்பை ஒழுங்கு செய்ததாக குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.