November 21, 2024

மிருசுவில் படுகொலையின் 22 ஆவது ஆண்டு நினைவேந்தல்!

யாழ்ப்பாணம் மிருசுவில் படுகொலையின்  22 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை மிருசுவில் தேவாலயத்திற்கு முன்பாக இடம்பெற்றது. 

சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஞா. கிசோரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட மூன்று பிள்ளைகளின் தாயார் ஈகைச்சுடர் ஏற்றினார். 

அதனை தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் , நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளர் க. வாமதேவன் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். 

உள்நாட்டு யுத்தம் காரணமாக மிருசுவில் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வடமராட்சி பகுதியில் வசித்து வந்தவர்களில் ஒன்பது பேர் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த தமது வீடுகளை பார்வையிட கடந்த 2000ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் திகதி சென்றவேளை அவர்களை இராணுவத்தினர் கைது செய்து சித்திரவதைகளுக்கு உள்ளாகி, 08 பேரை படுகொலை செய்து மலசல கூட குழிக்குள் வீசியிருந்தனர்.

அதன் போது காயங்களுடன்  அங்கிருந்து பொன்னுத்துரை மகேஸ்வரன் என்பவர் தப்பி வந்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். 

ஞானச்சந்திரன் ,  சாந்தன், ஞானபாலன் ரவிவீரன், செல்லமுத்து தெய்வகுலசிங்கம், வில்வராஜா பிரதீபன், சின்னையா வில்வராஜா, நடேசு ஜெயச்சந்திரன், மற்றும் வில்வராஜா பிரசாத் ஆகிய  எட்டுப் பேரே படுகொலை செய்யப்பட்டனர். 

படுகொலை சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, 14 இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். 

அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் 09 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில் 5 இராணுவத்தினருக்கு எதிரான வழக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டது.

பின்னர் கொழும்பு விசேட மேல் நீதிமன்றில் மூன்று நீதிபதிகள் முன்னிலையில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று,  2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25ஆம் திகதி அன்று 4 இராணுவத்தினருக்கு எதிராக போதிய சாட்சி ஆதாரங்கங்கள் இல்லை என அவர்களை வழக்கில் இருந்து விடுவித்த மன்று , சுனில் ரத்நாயக்க என்பவரை குற்றவாளியாக கண்டு மரண தண்டனை தீர்ப்பளித்தது. 

அந்நிலையில் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே , மரண தண்டனை கைதியான சுனில் ரத்நாயக்காவிற்கு பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்தார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert