இனஅழிப்பை மூடி மறைக்க பேச்சு!
தமிழ்க் கட்சிகளை பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைத்திருக்கின்றார். தமிழ்க் கட்சிகளும் பேச்சுவார்த்தைகளுக்குத் தம்மைத் தயார்படுத்துகின்றன. சமஷ்டி என்ற கோரிக்கையை முன்வைப்பதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு தமிழரசுக் கட்சி அழைப்பு விடுத்திருக்கின்றது.
இருந்த போதிலும், சமஷ்டி எனக்கூறி இன அழிப்பை மூடிமறைப்பதற்கோ, சர்வதேச நீதி கோரலை பலவீனப்படுத்துவதற்கோ இடமளிக்க முடியாது என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழத்தமிழரின் உறவினர் அமைப்பு தெரிவித்துள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழத்தமிழரின் உறவினர் அமைப்பு ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பிலேயேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழத்தமிழர் பிரச்சினை, அரசியல் கைதிகள் தொடர்பில் ஆராய்வதற்காக தமிழ்க் கட்சிகளுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்பை எச்சரிக்கையுடனேயே பார்க்கவேண்டியிருக்கின்றது. இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளின் மத்தியில் இவ்வாறான அழைப்பை விடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ரணில் அரசுக்கு ஏற்பட்டிருக்கின்றது.
அதாவது, தனது நெருக்கடிகளைச் சமாளிப்பதற்கும், சர்வதேச அழுத்தங்களை எதிர்கொள்வதற்குமான ஒரு உபாயமாகவே ஜனாதிபதி இந்தப் பேச்சுக்களைப் பயன்படுத்துவார் என்பதில் சந்தேகமில்லை. அதனால், தமிழ்த் தரப்புக்கள் மிகுந்த எச்சரிக்கையுடனேயே இவ்விடயத்தைக் கையாள வேண்டும்.
ஜனாதிபதியின் அழைப்பை பிரதான தமிழ்க் கட்சிகள் உடனடியாகவே வரவேற்றுள்ளன. சமஷ்டி முறையிலான தீர்வு ஒன்றுக்கான கோரிக்கையை முன்வைத்து பேசப்போவதாக தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருக்கின்றார். இதற்கான ஆலோசனைக்கு ஏனைய தமிழ்க் கட்சிகளுக்கும் அவர் அழைப்பு விடுத்திருக்கின்றார். தற்போதுள்ள நிலையில் ஜனாதிபதியின் அழைப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இல்லை. பொருளாதார நெருக்கடி, சர்வதேச அழுத்தங்கள், புலம்பெயர்ந்த தமிழர்களின் முதலீட்டை அரசாங்கம் எதிர்பார்த்திருப்பது போன்றன தமிழ்த் தரப்பின் பேரம்பேசும் பலத்தை அதிகரித்திருக்கின்றது. இந்த நிலையில், சமஷ்டி என்ற கோரிக்கையை முன்வைப்பது அவசியமானதும், நியாயமானதும்தான்.
ஆனால், சமஷ்டி எனக்கூறிக்கொண்டு இன அழிப்பை மூடிமறைக்க இடமளிக்கக்கூடாது. அதேபோல சர்வதேச நீதி கோரும் விடயத்திலும் விட்டுக்கொடுப்புக்கள் இருக்க முடியாது. இனவழிப்பு யுத்தம் முடிவடைந்து 13 வருட காலத்தில் கூட்டமைப்பால் எதனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை. தற்போதைய
சூழ்நிலையைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெற்றுக்கொள்வதில், தமிழ்க் கட்சிகள் நிதானமாகவும், தீர்க்க தரிசனத்துடனும் செயற்படவேண்டும். சமஷ்டி என்பதை ஏற்கமுடியாது என்பதை ஜனாதிபதி ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதனால், ஜனாதிபதியிடமிருந்து எந்தவிதமான உத்தரவாதத்தையும் பெறாமல் பேச்சுக்களுக்குச் செல்வது தமிழ் மக்களுக்கு பாதகமாகவே அமையும். கடந்த காலங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் நீதிக்கான கோரிக்கைகளை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளுக்குத்துணை போனது. இனஅழிப்பை மூடிமறைப்பதற்கும், தமிழ் மக்களுக்கான நீதிக்கான போராட்டத்தை மழுங்கடிப்பதற்கும் இந்தப் பேச்சுக்களைப் பயன்படுத்த அரசாங்கம் முற்படும். இதுதான் கடந்த காலங்களிலும் நடைபெற்றது. அதனால், இவ்விடயத்தில் தமிழ்த் தரப்புக்கள் எச்சரிக்கையுடன் செயற்படவேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழத்தமிழரின் உறவினர் அமைப்பு தெரிவித்துள்ளது.