November 21, 2024

பேச்சுவார்த்தைக்கான நாடகங்களை நடத்திக் கொண்டு காணிகளை சுவீகரிக்க முயற்சி

தென்னிலங்கையில் ரணில் – ராஜபக்ச அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கான நாடகங்களை நடத்திக் கொண்டு வடக்கு  கிழக்கில் தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை சுவீகரிக்க முயற்சிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஸ் தெரிவித்துள்ளார்.

வடக்கு ஆளுனர் அலுவலகம் முன் நேற்று இடம்பெற்ற முற்றுகைப் போராட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“தமிழ் மக்களினுடைய விருப்பங்களை மீறி தமிழ் மக்களினுடைய காணிகளை சுவீகரித்து முப்படையினருக்கும் வழங்குவதற்காக வடக்கு ஆளுனரால் கூட்டப்பட இருந்த கூட்டத்தை மக்களை திரட்டி மக்களினுடைய எதிர்ப்போடு முறியடித்து இருகின்றோம்.

ஆளுனருடைய சதி முயற்சி தற்காலிகமாக முறியடிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் விருப்பங்களுக்கு மாறாக தென்னிலங்கையில் ரணில் – ராஜபக்ச அரசு பேச்சுவார்த்தைக்கான நாடகங்களை நடத்திக் கொண்டு வடக்கு- கிழக்கில் தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை சுவீகரிக்க எடுத்த முதல் கட்ட முயற்சியை தடுத்து நிறுத்தியிருக்கின்றோம்.

இதற்கு ஒரு போதும் நாங்கள் அனுமதிக்கப்போவது கிடையாது. ஆளுனர் அவர்கள் இடையில் போராட்டக்காரர்களை சந்தித்து மிரட்டுகின்ற, எச்சரிக்கின்ற தொனியில் அடாவடியாக எமது போராட்டத்தை நிறுத்த முற்பட்டார்.

ஆனால் ஆளுனருக்கும் நாங்கள் காத்திரமான ஒரு செய்தியை சொல்லியிருக்கின்றோம். அச்சுறுத்தலுக்குக்கும், மிரட்டல்களுக்கும் ஒரு போதும் அஞ்சமாட்டோம் என்ற செய்தியை ஆளுனருக்கு சொல்லியிருக்கின்றோம்.

ஆளுனர் பல பொய்யான தகவல்களை கூறி எங்களை தவறாக வழிநடத்த முற்பட்டார்.

கடந்த ஆண்டில் இருந்து சுவிகரிக்கப்பட இருக்கின்ற காணிகள் தொடர்பாக மக்களின் வீடுகளுக்கு கடிதங்களை அனுப்பிவிட்டு இன்று தாங்கள் அவ்வாறு அனுப்பவில்லை என அப்பட்டமான பொய்யைக் கூறி போராட்டத்தை நிறுத்த முற்பட்டார்.

ஆனால், இவர்களது சதி நயவஞ்சக வார்த்தைகளுக்கு மயங்காது தமிழ் மக்களும், நாங்களும் தெளிவாக இருந்தமையினால் இன்றைய தினம் கூட்டப்பட இருந்த கூட்டம் தடுத்கப்பட்டது” என அதில் மேலும் தெரிவித்துள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert