பிரித்தானியாவின் முதல் வயதுகுறைந்த பிரதமர் ரிஷி சுனக்!!
பிரித்தானியாவில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக தேர்வானதையடுத்து, அந்நாட்டின் பிரதமராக ரிஷி சுனக் பொறுப்பேற்க உள்ளார். இதன் மூலம், பிரித்தானிய வரலாற்றில் முதல்முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர், பிரதமர் பதவியில் அமர்கிறார்.
கடந்த 2019ஆம் ஆண்டு பிரித்தானியாவில் நடைபெற்ற நாடாளுமன்றத்தேர்தலில் கான்சர்வேட்டிவ் கட்சி வெற்றி பெற்றதையடுத்து, அக்கட்சியின் தலைவர் போரிஸ் ஜோன்சன் பிரதமராகப் பதவியேற்றார்.
மூன்று ஆண்டுகாலம் ஆட்சியை வழிநடத்திய அவர், பொருளாதாரத்தை சரியாக கையாளவில்லை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானதால், பிரதமர் பதவியிலிருந்து விலகினார். அதன்பிறகு புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட லிஸ் ட்ரஸும், அதே காரணத்துக்காக அண்மையில் பதவி விலகினார்
இதனையடுத்து, கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள் தொடங்கிய போது, அப்போட்டியில், போரிஸ் ஜோன்சன், முன்னாள் நிதி அமைச்சரான ரிஷி சுனக் ஆகியோர் இருந்தனர்.
அதேபோல், பெண் நாடாளுமன்ற உறுப்பினர் பென்னி மார்டண்ட் என்பவரும் போட்டியிடுவதாக அறிவித்தார். எனினும், வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கு முன், போட்டியில் இருந்து விலகுவதாக போரிஸ் ஜோன்சன் அறிவித்தார்.
களத்திலிருந்த பென்னி மார்டாண்டிற்கு 26 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்த நிலையில், பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகுவதாகவும், ரிஷி சுனக்கிற்கு ஆதரவளிப்பதாகவும் அவரும் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கை, ஆளுங்கட்சியின் தலைவராகவும், புதிய பிரதமராகவும் தேர்ந்தெடுப்பதாக, கன்சர்வேடிவ் கட்சி அறிவித்தது.
இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்களின் நாட்டின் முதல் இந்திய வம்சாவளி பிரதமர் என்ற பெருமைக்குரிய தகுதியை, ரிஷி சுனக் பெற்றுள்ளார்.
42 வயதான அவர், பிரித்தானியாவின் இளம் வயது பிரதமர் என்ற பெருமையையும் பெறுகிறார். பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ், ரிஷி சுனக்கை பிரதமராக நியமித்த பின், அவர் முறைப்படி பதவியேற்க உள்ளார்
இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகனான ரிஷி சுனக், பிரித்தானியாவில் உள்ள 250 பணக்காரர்களில் ஒருவராவர்.
இவரின் தாத்தா – பாட்டி பிரித்தானிய ஆட்சிகாலத்தில் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். அங்கிருந்து அவர்கள் கிழக்கு ஆப்ரிக்காவிற்கு குடிபெயர்ந்த நிலையில், 1960களில் பிரித்தானிய நாட்டிற்கு குடிபெயர்ந்துள்ளனர்.
வின்செஸ்டர் கல்வி நிறுவனத்தில் பள்ளிப்படிப்பை முடித்த ரிஷி சுனக், ஆக்ஸ்போர்டு மற்றும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை முடித்தார்.
உலகின் முன்னணி நிதி நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ்சில் முன்னணி பொறுப்புகளை வகித்த ரிஷி, நாராயண மூர்த்தியின் மகளான அக்சதா மூர்த்தியை திருமணம் செய்தார்.
2015ஆம் ஆண்டில் தீவிர அரசியல் களத்தில் குதித்த ரிஷி சுனக். கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு, ரிச்மன்ட் பகுதியின் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். 2019ஆம் ஆண்டு தேர்தலில் வென்று, போரிஸ் ஜோன்சன் அமைச்சரவையில், நிதியமைச்சராக பதவி வகித்தார்.
ஏற்கனவே இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை அதிபராகவும், பிரவீந்த் ஜுக்நாத் மொரிஷியஸ் பிரதமராகவும், ஆண்டனியோ கோஸ்டா போர்ச்சுக்கல் பிரதமராகவும் உள்ள நிலையில், அப்பட்டியலில் ரிஷி சுனக்கும் இணைந்துள்ளார்.