வடமராட்சியில் இரவில் நடமாட முடியாது?
காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்துக்குட்பட்ட பகுதிகளில் அண்மைய நாள்களாக குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன என்று விசனம் தெரிவித்துள்ள பொதுமக்கள், பொலிஸ் இந்த விடயத்தில் அசமந்தமாககச் செயற்படுகின்றனர் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அண்மைய நாள்களாக பருத்தித்துறை, நெல்லியடி, வல்வெட்டித்துறைப் பொலிஸ் பிரிவுகளில் வழிப்பறிக் கொள்ளைகளும், வீடு உடைத்து திருடும் சம்பவங்களும், மோட்டார் சைக்கிள் திருட்டுக்களும் அதிகரித்துள்ளன. நேற்றுமுன்தினம் மட்டும் வல்வெட்டித்துறைப் பொலிஸ் பிரிவில் 4 களவுச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. 3 வழிப்பறிச் சம்பங்களில் 10 பவுண் நகைகள் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளன.
வல்வெட்டித்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதி ஒன்றில் வீட்டின் கூரை பிரித்து பகல் வேளையில் நான்கரைப் பவுண் நகைகளும், ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபா பணமும் திருடப்பட்டுள்ளது.
அதேநேரம், கடந்த சில நாள்களாக மோட்டார் சைக்கிள் திருட்டுக்கள் அதிகரித்துள்ளதுடன், திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தி வழிப்பறிக் கொள்ளைகளில் ஈடுபடுவதும் வடமராட்சிப் பகுதியில் அதிகரித்துள்ளது.
கடந்த சில நாள்களாகக் குற்றங்கள் அதிகரித்துள்ளபோதும், இதுவரையில் பொலிஸார் சந்தேகநபர்கள் எவரையும் கைது செய்யவில்லை என்று பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயத்தில் பொலிஸார் அசமந்தமாகச் செயற்படுகின்றனர் என்று கூறும் பொதுமக்கள் வீதிகளில் நடமாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும், வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் விசனிக்கின்றனர்.
குற்றச் செயல்களைத் தடுக்க வேண்டிய பொலிஸார், குற்றவாளிகளைக் கைது செய்யாது மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்று அறிவிக்கின்றனர். இது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. வீதியிலும், வீட்டிலும் அச்சத்துடனேயே இருக்க வேண்டியுள்ளது என்று தெரிவித்துள்ள மக்கள் இந்த விடயத்தில் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.