ஆஸ்ரேலியாவில் சைபர் தாக்குதல்: சுமார் 10 மில்லியன் பேரின் தரவுகள் திருடப்பட்டன!!

General view of an Optus store in Sydney, Thursday, September 22, 2022. Optus customers' private information could be compromised after a cyber attack hit the phone and internet provider. (AAP Image/Bianca De Marchi) NO ARCHIVING
ஆஸ்ரேலியாவில் கடந்த வாரம் இடம்பெற்ற இணைய (சைபர்) தாக்குதலில் சுமார் 10 மில்லியன் வாடிக்கையாளர்களின் தரவுகள் திருடப்பட்டதாக ஆஸ்ரேலிய தொலைத் தொடர்பு நிறுவமான ஒப்டஸ் (Optus) அறிவித்துள்ளது. அதாவது ஆஸ்ரேலிய மக்கள் தொகையில் 40 விழுக்காட்டு மக்களின் தரவுகள் திருடப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் இது மிக மோசமான தரவு மீறலாக இருக்கலாம் என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர்.
சிங்கப்பூர் தொலைத்தொடர்பு லிமிடெட்டின் துணை நிறுவனமான ஒப்டஸ் அதன் நெட்வொர்க்கில் சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டைக் கண்டறிந்த சுமார் 24 மணி நேரத்திற்குப் பிறகு இந்த மீறலைப் பகிரங்கப்படுத்தியது.
குறிப்பாக வாடிக்கையாளர்களின் பெயர்கள், பிறந்த திகதி, வீட்டு முகவரி, கடவுச்சீட்டு, வாகன ஓட்டுனர் உரிம எண்கள், தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் உள்ளிட்டவை திருடப்பட்டுள்ளன. ஆனால் பணம் செலுத்தும் விபரங்கள் மற்றும் கணக்கு அதற்கான கடவுசொற்கள் திருடப்படவில்லை என்று கூறியுள்ளது.
சுமார் 2.8 மில்லின் போின் கடவுச்சீட்டு மற்றும் அடையாளத் திருட்டு நடந்துள்ளது.
குறித்த மீறல் தொடர்பில் காவல்துறையினருக்கும், நிதி நிறுவனங்களுக்கும், அரச கட்டுப்பாளர்களுக்கும் அறிவித்துள்ளதாக ஒப்டஸ் தொலை தொடர்பு நிறுவனம் கூறியது.
ஒப்டஸின் தலைமை நிர்வாகி கெல்லி பேயர் ரோஸ்மரின் மன்னிப்பு கோரி உள்ளார். இதுபற்றி அவர் மேலும் கூறும்போது, „இது நவீனமான தாக்குதல். எங்கள் நிறுவனம் மிகவும் வலுவான இணைய பாதுகாப்பைக் கொண்டுள்ளது. இந்த திருட்டைத் தடுக்க முடியாமல் போனதற்காக ஏமாற்றம் அடைந்துள்ளேன்“ என தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை அதிகாலை, இணையப் பயனர் ஒரு ஆன்லைன் மன்றத்தில் தரவு மாதிரிகளை வெளியிட்டார் மற்றும் ஒப்டஸ் நிறுவனத்திடமிருந்து கிரிப்டோகரன்சியில் $1m (A$1.5m; £938,000) கப்பம் கோரினார்.
நிறுவனம் பணம் செலுத்த ஒரு வாரம் உள்ளது அல்லது மற்ற திருடப்பட்ட தரவு தொகுப்பாக விற்கப்படும் என்று அந்த நபர் கூறினார்.