லண்டனில் ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கு (நேரலை)
பிரித்தானியா ராணி 2 ஆம் எலிசபெத் கடந்த 8ஆம் நாள் உயிரிழந்தார். அவர் தனது 96-வது வயதில் ஸ்கொட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
ஸ்கொட்லாந்தில் இருந்து விமானம் மூலம் 2ஆம் எலிசபெத்தின் உடல் கடந்த 13 ஆம் நாள் இங்கிலாந்து சென்றடைந்தது. லண்டனில் ராணி எலிசபெத்தின் உடலை பிரித்தானியா மன்னர் சார்லசும், ராணி கமிலாவும் பெற்றுக்கொண்டனர்.
விமான நிலையத்தில் இருந்து மகிழுந்து மூலம் 2ஆம் எலிசபெத்தின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர், லண்டனில் நாடாளுமன்ற வெஸ்ட்மின்ஸ்டா் அரங்கில் அஞ்சலிக்காக கடந்த புதன்கிழமை முதல் வைக்கப்பட்டிருந்தது. கடந்த ஐந்து நாள்களாக லட்சக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் நின்று இங்கிலாந்து ராணி 2ஆம் எலிசபெத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அங்கிருந்து இன்று திங்கட்கிழமை (19) வண்டியில் ராணியின் உடல் வைக்கப்பட்ட பேழை, வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்துக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. பேழை மீது வைரம் பொறித்த கிரிடம், செங்கோல் வைக்கப்பட்டிருந்தது. அந்த அணிவகுப்பு நிகழ்வில் மன்னர் 3ஆம் சார்லஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, தேவாலயத்தில் ராணி எலிசபெத்தின் உடல் வைக்கப்பட்டு சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. பிரார்த்தனையின் முடிவாக 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது
இதன் பின்னர், அவரது உடல் லண்டன் நகரின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் வழியாக பீரங்கி வண்டியில் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அருகே உள்ள வெலிங்க்டன் ஆர்ச்சிற்கு எடுத்து செல்லப்பட்டது. மன்னர் சார்லசும், இளவரசர்கள் வில்லியம், ஹாரி ஆகியோர் உடன் சென்றனர்.
இறுதியாக, ராணியின் உடல் விச்சர் கோட்டையில் அமைந்துள்ள செயின்ட் ஜோர்ஜ் தேவாலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு பிரார்த்தனை முடிந்த உடன், ராணியின் உடல் அடங்கிய பேழை விண்ட்சர் கோட்டையின் தரைக்கு கீழ் உள்ள ரோயல் வால்ட்டில் நல்லடக்கம் செய்ய அனுப்பப்பட்டது. கணவர் பிலிப்பின் உடல் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை அருகே ராணி எலிசபெத்தின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இங்கிலாந்து ராணி 2ஆம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில், உலக நாடுகளின் தலைவர்கள் உள்பட இலட்சக்கண்ககானோர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.