November 21, 2024

கிருசாந்தியின் 26 ம் ஆண்டு நினைவு நாள்!

அரசபடைகளால் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி கிருசாந்தியின் 26 ம் ஆண்டு நினைவு நாள் செம்மணியில் இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

1996ஆம் புரட்டாதி மாதம் 7ஆம் திகதி யாழ். சுண்டிக்குளி கல்லூரி மாணவி கிருசாந்தி (வயது 18) வீதியால் சென்று கொண்டிருந்த வேளை செம்மணி பகுதியில் அப்போதிருந்த இராணுவ முகாமில் வழிமறித்த இராணுவத்தினர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி கழுத்தை நெறித்துபடுகொலை செய்திருந்ததாக கூறப்படுகின்றது.

செம்மணி இராணுவ முகாமில் கிருசாந்தியை தடுத்து வைத்திருந்ததை ஊரவர்கள் கண்ணுற்று மாணவியின் தாயாரிடம் கூறியதை அடுத்து, மாணவியின் தாயாரான ஆசிரியை குமாரசாமி இராசம்மா (வயது 59) மாணவியின் சகோதரனும், யாழ்.பரியோவான் கல்லூரி மாணவனான குமாரசாமி பிரணவன் (வயது 16) மற்றும் மாணவியின் வீட்டுக்கு அயல் வீட்டில் வசிக்கும் தென்மராட்சி பல நோக்கு கூட்டுறவு சங்கத்தில் உதவியாளராக கடமையாற்றிய சிதம்பரம் கிருபாமூர்த்தி (வயது 35 ) ஆகியோர் மாணவியை தேடி சென்று செம்மணி இராணுவ முகாமில் விசாரித்த வேளை அவர்கள் மூவரையும் இராணுவத்தினர் படுகொலை செய்ததாகவும் கூறப்படுகின்றது.

அன்றைய தினம் நள்ளிரவு படுகொலை செய்யப்பட்ட நால்வரின் உடல்களையும் செம்மணி பகுதியில் உள்ள வயல் வெளியில் புதைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

செம்மணிப்படுகொலைப் புதைகுழியை நினைவுகூர கிருசாந்தி காணாமற்போன இன்றைய நாளே பொருத்தமானது.

இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் மாத்திரம் இனப்படுகொலை செய்யப்படவில்லை. அதற்கு முன்பாகவே பல்வேறு திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம் ஈழத் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். அப்படியான ஒரு நிகழ்வே செம்மணிப்படுகொலை. இன்றைய நாள் செம்மணிப்புதைகுழி அம்பலமான நாள். செம்மணிப் படுகொலைப் புதைகுழி எவரலாறும் மறக்க முடியாத இனப்படுகொலைப் புதைகுழி

அங்கு புதைக்கப்பட்டவர்கள் கிருசாந்தியும் அவளது தாய் இராசம்மாவும் தம்பி பிரணவனும் பக்கத்து வீட்டு அண்ணன் சிதம்பரம் கிருபாமூர்த்தி மாத்திரமல்ல. அங்கு சுமார் 600க்கும் மேற்பட்டவர்கள் கொன்று புதைக்கப்பட்டார்கள் என்ற அதிரச்சியட்டும் செய்தி அம்பலமானது. இலங்கை அரசு யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய பின்னர் 1996 மற்றும் 1997 ஆம் ஆண்டுகளில் தமிழ் இளைஞர்களை அழிக்க வேண்டும் என்ற திட்டமிட்ட இன அழிப்பு கொள்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்படி யாழ்ப்பாணத்து இளைஞர்கள் யுவதிகள் காணாமல் போகச் செய்யப்பட்டனர்.

கிருசாந்தி வன்கொலை மூடுண்டிருந்த யாழ்ப்பாணத்திலும் யாழ்ப்பாணத்திற்கு வெளியிலும் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் இலங்கை பாராளுமன்றத்தில் பெரும் வாதங்கள் எழுந்தன. இதனால் தொடர் யுத்தத்தில் ஈடுபட்ட இலங்கை அரசுக்கு பெரும் நெருக்கடி எழுந்தது. நெருக்கடியை தவிர்க்க சந்திரிக்கா அரசு ஒன்பதுபேரை கைது செய்தது. ஏழு இராணுவத்தையும் இரண்டு சிப்பாய்களையும் செய்து செய்தனர். அரசு எதிர்பாராத விதமாய் கிருசாந்தி கொலை வழக்கு செம்மணிப் புதைகுழி வழக்காகியது. 1998ஆம் ஆண்டு ஜீலை 3ஆம் திகதி கிருசாந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவச் சிப்பாய் சோமரத்தின ராஜபக்ச கொழும்பு நீதிமன்றத்தில் வெளியிட்ட வாக்குமூலம் பெரும் கவனத்தை ஈர்த்தது.

”செம்மணியில் கிருசாந்தி, அவரது தம்பி பிரணவன், தாயார் ராசம்மா குமாரசாமி, அயலவர் சிதம்பரநாதன் மட்டுமல்ல, 300இல் இருந்து 400 வரை அப்பாவி மக்கள் புதைக்கப்பட்டுள்ளார்கள். நான் கிருசாந்தியையோ மற்றவர்களையோ கொலை செய்யவில்லை.

எனது மேலதிகாரிகள் கொன்றுவிட்டு கொண்டு வந்த சடலங்களை அவர்களின் கட்டளையின் பேரில் புதைப்பதுதான் எனது வேலை. என்னை செம்மணிக்கு கூட்டிச் சென்றால் அப்படிப் புதைக்கப்பட்ட தமிழர்களின் புதைகுழிகளை என்னால் அடையாளம் காட்ட முடியும்.”

அப்போதைய அரசு கிருசாந்தி வழக்குடன் இந்த விவகாரத்தை மூடிமறைக்க முற்பட்டது. ஆனால் உலகளவில் இந்த விவகாரம் அவதானிக்கப்பட்டது. செம்மணிப் புதைகுழியை தோண்ட வேண்டும் உண்மையை கண்டறிய வேண்டும் என்று பல்வேறு மனித உரிமை அமைப்புக்கள் குரல் கொடுத்தன. இதனையடுத்து இலங்கை அரசுக்கு புதைகுழி விவகாரத்தை தட்டிக்கழிக்க முடியாத நிலை ஏற்பட்டது. செம்மணியில் வெளிவந்த எலும்புக்கூடுகள் சோமரத்தின ராஜபக்ச வாக்குமூலத்தை மெய்ப்பித்தது.

செம்மணியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை கண்ணீருடன் திரண்ட தாய்மாரும் உறவுகளும் அடையாளம் காட்டினர். யாழ்ப்பாணமே கண்ணீர் கோலம் பூண்டது. செம்மணியைவிட 16 புதைகுழிகள் உள்ளன என்றும் அதில் பத்துப் புதைகுழிகளை தன்னால் அடையாளம் காட்ட முடியும் என்றும் ஐந்தை உதவி பொலிஸ் அதிகாரி பெரேராவால் காட்ட முடியும். எஞ்சிய ஒன்றை (அது ஒரு கோவில் அருகில் உள்ளது), டி.எம். ஜெயதிலக்காவால் (மரணதண்டனை பெற்ற இன்னொரு சிப்பாய்) அடையாளம் காட்ட முடியும் என்றும் ராஜபக்ச கூறினார்.

அத்துடன் இந்தப் படுகொலைகளுடன் தொடர்புடைய இராணுவ அதிகாரிகளின் பட்டியலையும் தரமுடியும் என்று சிப்பாய் ராஜபக்ச கூறினார். கப்டன் லலித் ஹேவா, லெப்டினன் விஜயசிறிவர்த்தன, லெப்டினன் துடுகல, மேஜர் வீரக்கொடி, மேஜர் குணசேகரா முதலிய இராணு அதிகாரிகளது விபரங்களை பகிரங்கப்படுத்தினான். அத்துடன் தனது வாக்குமூலத்தில் பல்வேறு கொலைகளை ராஜபக்ச விபரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert